புதுடெல்லி:
தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் பணி நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் பகிர்ந்ததாகவும் கூறப்பட்டது. அந்த சாமியாரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அவரிடம் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள், முன்கூட்டிய கணிப்பு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், நேற்று இரவு அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அவரை இன்று டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சித்ரா ராமகிருஷ்ணாவிடம் வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற வேண்டியிருப்பதால் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, 7 நாட்கள் சித்ரா ராமகிருஷ்ணாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து சித்ராவை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.