காபூல்-‘இந்தியா அனுப்பிய கோதுமை மிக நன்றாக இருந்தது; ஆனால், பாகிஸ்தான் அனுப்பிய கோதுமை, எதற்கும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது’ என, ஆப்கனைச் சேர்ந்த தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாதிகளிடம் மீண்டும் சிக்கியுள்ளது. அத்துடன், கடும் பொருளா தார நெருக்கடியாலும், உணவுப் பொருட்கள் பஞ்சத்தாலும், ஆப்கன் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆப்கனில் தலிபான் அரசை, எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. ஆனால், மனித நேய அடிப்படையில், ஆப்கன் மக்களுக்கு உதவி செய்ய இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன.
ஆப்கனுக்கு, 50 ஆயிரம் டன் கோதுமை அனுப்புவதாக இந்தியா உறுதியளித்தது. இதுவரை இரண்டு கட்டமாக கோதுமை அனுப்பப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானும், ஆப்கனுக்கு கோதுமை அனுப்பியது.’பாகிஸ்தான் கோதுமையை வாயில் வைக்க முடியவில்லை’ என, தலிபான் அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:இந்தியா அனுப்பிய கோதுமை மிகவும் தரமாகவும், சுவையாகவும் உள்ளது; ரொட்டி உள்ளிட்ட உணவுகள் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அனுப்பிய கோதுமை மிகவும் மோசமாக உள்ளது. உணவு பொருட்கள் தயாரிப்பதற்கு, சிறிதும் பயன்படுத்த முடியாத கோதுமையை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. அதில் செய்யப்பட்ட உணவை, வாயில் வைக்க முடியவில்லை.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் கோதுமை மோசம் என தெரிவித்ததற்காக, அந்த அதிகாரியை, தலிபான் அமைப்பின் மூத்த அதிகாரிகள், ‘டிஸ்மிஸ்’ செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கடையில், சமூக வலைதளங்களில் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தும், பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தும், ஆப்கன் மக்கள் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
Advertisement