டெல்லி : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள போப் பிரான்சிஸ், ”இது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டும் இல்லை. மரணம், துயரம், அழிவை விதைக்கும் போர்” எனக் கூறியுள்ளார்.
ரோமில் உள்ள வாடிகன் நகரில் இருக்கும் புனித பீட்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வாராந்திரக் கூட்டத்தில் போப்பாண்டவர் புனித பிரான்ஸில் கலந்துகொண்டார். அப்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து பேசிய அவர், “உக்ரைன் மீது ரஷ்யா நடத்துவது சிறப்பு ராணுவ நடவடிக்கை என ஏற்றுக்கொள்ள முடியாது. இது மரணத்தை, துயரத்தை, அழிவை விதைக்கும் போர். உக்ரைனில் ரத்தமும் கண்ணீரும் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தக் கொடூரத்தைப் பாருங்கள். இதனை நிறுத்துங்கள், புதின். போர் என்பது முட்டாள்தனம்.
அமைதியின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள புனிதப் பார்வை எப்போதும் தயாராகவே இருக்கிறது. உக்ரைனில் உதவி தேவைப்படுவர்களுக்கு சேவை செய்ய இரண்டு ரோமன் கத்தோலிக்க கார்டினல்கள் உக்ரைன் சென்றுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், ”தங்களின் உயிரை பணயம் வைத்து போர் பகுதியில் இருந்து போரின் கோரத்தை தொடர்ந்து மக்களுக்கு தெரிவித்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.