கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த மாணவிகள் தீபிகா, வர்ஷா, மோகனா. இவர்கள் உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவகல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்கள்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இதனால் இவர்கள் 3 பேரும் அங்கிருந்து நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.
அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தது. அதன்படி மாணவிகள் தீபிகா, வர்ஷா, மோகனா ஆகிய 3 பேரும் நேற்று உக்ரைனில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்தனர்.
பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் கோவை விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களை பெற்றோர் கண்ணீர் மல்க கட்டி தழுவி வரவேற்றனர். பின்னர் கார் மூலம் அவர்கள் வால்பாறைக்கு சென்றனர்.
நாங்கள் தங்கி இருந்த விடுதியில் உள்ள கீழ்தளத்தில் பாதுகாப்பாக இருந்தோம். அப்போது ரஷியா ராணுவ தாக்குதல் காரணமாக நாங்கள் இருந்த இடத்தின் அருகிலேயே குண்டு வெடித்து சிதறியதுடன், தீப்பிழம்பை கக்கியது.இதனை பார்த்ததும் நாங்கள் மிகவும் அச்சம் அடைந்தோம். மேலும் அங்குள்ள மிகப்பெரிய 2 அணுமின் நிலையத்திலும் கசிவும் ஏற்பட்டது. இதனால் அச்சமான எங்களுக்குள் ஊர் திரும்ப முடியுமா என்ற பயம் ஏற்பட்டது.
நாட்டிற்கு திரும்ப முடிவு செய்த எங்களுக்கு, அண்டை நாடான ருமேனியா செல்வதற்கு கல்லூரி நிர்வாகம் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தது.மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு எங்களை உக்ரைனில் இருந்து அண்டை நாட்டிற்கு அழைத்து வந்தது.
நாங்கள் தங்கியருந்த இடத்தில் இருந்து 1000 கி.மீட்டர் தூரம் பஸ்சில் பயணம் செய்து ருமேனியா நாட்டின் எல்லையை அடைந்தோம். அங்கு இந்திய தூதரகத்தின் உதவியுடன் மால்டோவா நாட்டிற்கு சென்றோம்.
பின்னர் அங்கிருந்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த விமானத்தில் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தோம். போர் நடக்கும் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்களை திரும்ப அழைத்து வந்த மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அங்கு எப்போது சகஜ நிலை திரும்பும் என்று தெரியவில்லை. டாக்டர் ஆகும் கனவுடன் அங்கு சென்றோம். இப்போது எங்கள் படிப்பு கேள்விக்குறியாகிவிட்டது. எனவே தமிழக முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் சிறப்பு அனுமதியுடன் மீதமுள்ள படிப்பை நாங்கள் தமிழகத்தில் ஏதாவது ஒரு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதி பெற்று கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையும் படியுங்கள்… ஜெலன்ஸ்கியிடம் டெலிபோனில் பேச்சு: தொடர்ந்து சுமியில் இருந்து இந்தியர்களை மீட்க ஆதரவு கோரிய பிரதமர் மோடி