மணிப்பூர்
மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, மார்ச் 5ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
பாஜக
60 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மணிப்பூரில் ஆட்சியை பிடிக்க 31 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
தற்போது பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில்,
காங்கிரஸ்
ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மணிப்பூர் மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது என்பது தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய
கருத்துக்கணிப்பு
முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. P-Marq நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 31, பாஜக 17, தேசிய மக்கள் கட்சி 8, பிற கட்சிகள் 4 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. India Today – Axis My India எடுத்த கருத்துக்கணிப்பில் பாஜக 33 முதல் 43 இடங்களிலும், காங்கிரஸ் 4 முதல் 8 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 4 முதல் 8 இடங்களிலும், NPF 4 முதல் 8 இடங்களிலும், பிற கட்சிகள் 0 முதல் 7 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை பாஜக 41, காங்கிரஸ் 18, NPP 16, NPF 8, பிற கட்சிகள் 17 பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. Zee-Designboxed வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜக 39, காங்கிரஸ் 12 – 17, NPF 3 – 5, NPP 2 – 5 இடங்களில் வெல்லக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் 28 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றது.
இதற்கடுத்த இடத்தில் பாஜக 21 இடங்களில் வென்றிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, லோக் ஜன்சகதி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது. என்.பைரேன் சிங் மணிப்பூர் முதல்வராக பதவியேற்றார். இதன்மூலம் மணிப்பூரில் முதல்முறை பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.