மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையின்படி இந்த போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக எல்லையோர நகரங்கள், தலைநகர் கீவ், முக்கிய நகரமான கார்கிவ் பகுதிகள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. மேலும் ராணுவ தளவாடங்கள் இருக்கும் இடங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் தாக்குதலை நடத்தினர்.
மேலும், உக்ரைனின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைவதற்காக ரஷ்ய படையினர் துப்பாக்கிச் சண்டையிலும் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்ந்து முன்னேறுவதற்கு வசதியாக ஏவுகணை வீச்சு, குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.
ரஷ்யாவின் இந்த ஆக்ரோஷமான தாக்குதலால் உக்ரைன் மக்கள் கடும் பீதி அடைந்தனர். அவர்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகள், வீடுகளின் அடிப்பகுதிகளில் அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து 10-வது நாளாக நேற்று ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்தது.
இதனிடையே, உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்காக சென்றிருந்த சுமார் 18 ஆயிரம் இந்திய மாணவர்கள் போர் பகுதிகளில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளுக்கு இந்திய மீட்பு விமானங்கள் சென்றன. போர் பதற்றங்களுக்கு நடுவே உக்ரைனில் இருந்து ரயிலிலோ பேருந்துகளிலோ அல்லது நடந்தே மேற்குறிப்பிட்ட நாடுகளின் எல்லை பகுதிகளுக்கு வரும் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்க ரஷ்யா மற்றும் உக்ரைனை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. தொடர்ந்து சண்டை நடந்து வருவதால் மீட்பு பணியில் ஈடுபட முடியாத நிலை உள்ளதால் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் கோரப்பட்டது.
இதனிடையே, ரஷ்யா நேற்று உக்ரைனின் 2 நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கான மீட்பு பணிகளுக்காக போர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று ரஷ்ய அரசு அறிவித்தது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல் னோவாகா ஆகிய 2 நகரங்களில் இன்று முதல் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது.
அந்நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறும் பாதைகள் அமைப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் நேற்று பகல் 11 மணி முதல் அமலுக்கு வந்தது.
ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த 2-ம் கட்டபேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 2 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். அவர்கள் வெளியேறுவதற்கான வசதிகளை உக்ரைன் செய்து கொடுத்து வருவதாகத் தெரிகிறது.
போரின்போது ஜேப்பரோஜியா அணுமின் நிலையத்தைக் கைப்பற்றிய ரஷ்யா நேற்று மரியுபோல் துறைமுக நகரை முடக்கியுள்ளது தெரியவந்துள்ளது. மரியுபோல் என்ற துறைமுக நகரத்தை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இதனை அந்த நகரின் மேயரும் உறுதி செய்துள்ளார். இதுதவிர தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பெருநகரங்களில் மீதான தாக்குதல் தீவிரமாகத் தொடர்கிறது.
ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம்
இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள போர் குறித்து தவறான செய்திகளை பரப்பும் நிறுவனங்கள், ஊடகங்கள், தனி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகியவை முழுவதுமாக தடை செய்வதற்கான புதிய சட்டத்தை புதின் பிறப்பித்துள்ளார்.
சமூக ஊடகங்களான பிபிசி, அமெரிக்க நிதியில் செயல்படும் வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ரேடியோ பிரீ யூரோப், ரேடியோ லிபர்டி, ஜெர்மன் ஒலிபரப்பு நிறுவனமான டாயிஷ் வெலே, லாட்வியாவிலிருந்து செயல்படும் இணையதளமான மெடூஸா ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவில் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. உக்ரைன் போர் தொடர்பாக எத்தகைய செய்திகளை வெளியிட வேண்டும் என்பது குறித்த வரையறையும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரோஸ்கோமெனாட்ஸோர் நிறுவனம் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றின் செயல்பாடுகளைத் தடை செய்துள்ளது. ரஷ்ய அதிகாரிகள் ட்விட்டரில் வெளியான கருத்துகளை நீக்கும்படி அறிவுறுத்தியும் அதை செயல்படுத்துவதில் தாமதம் காட்டியதால் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சட்டத்துக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கிரெம்ளின் மாளிகை கட்டுப்பாட்டில் செயல்படும் இரு அவைகளும் இதற்கு ஒப்புதல் அளித்தது. புதிய சட்டத்தின்படி குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகளாகும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும். விதிமீறலின் தன்மைக்கேற்ப அதிகபட்ச தண்டனையாக 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தங்களது செயல்பாடுகளை தற்காலிமாக நிறுத்தியுள்ளதாக புளூம்பெர்க், பிபிசி, சிஎன்என் ஆகிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் சார்பில் செயல்படும் பத்திரிகையாளர்கள் செய்திகள் அளிப்பதை நிறுத்தியுள்ளனர்.
போரில் ரஷ்யாவுக்கு பின்னடைவு மற்றும் உக்ரைனில் பொதுமக்கள் உயிரிழப்பு போன்ற செய்திகளை ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.