மகாராஷ்டிர மாநிலம் புனேயில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, பயணச்சீட்டு வாங்கி ரயிலில் பயணித்து மாணவியர் மற்றும் பயணியருடன் கலந்துரையாடினார்.
புனேயில் கிழக்கு – மேற்கு, தெற்கு வடக்கு என இருவழித்தடங்களில் 32 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாகக் கிழக்கு மேற்குத் தடத்தில் பணி முடிக்கப்பட்ட 12 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
பயணச்சீட்டு வாங்கிக் கார்வார் கல்லூரி முதல் ஆனந்த் நகர் வரை மெட்ரோ ரயிலில் சென்ற பிரதமர் மோடி, அதே ரயிலில் பயணித்த மாணவர்கள் மற்றும் பயணியரிடம் கலந்துரையாடினார்.
முன்னதாகப் புனே மாநகராட்சி வளாகத்தில் சத்ரபதி சிவாஜி சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரி, புனே மேயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.