பெய்ஜிங்: ரஷ்யா உடனான தங்களது உறவு உறுதியாக இருக்கிறது என்றும், இரு தரப்புக்கும் இடையிலான எதிர்கால திட்டங்கள் மிகவும் பரந்துபட்டவை என்றும் சீனா தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் சீனா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. உக்ரைனில் இருந்து வெளிநாட்டினரும், அகதிகளும் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிவரும் நிலையில், ரஷ்யா போர் நிறுத்தம் செய்ய உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என உக்ரைன் கோரி வருகிறது. உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறும்போது, “சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு உறுதியாக இருக்கிறது. இரு தரப்புக்கும் இடையிலான எதிர்காலத் திட்டங்கள் பெரிய அளவிலானது. இருந்த போதிலும், உக்ரைன் விவகாரத்தில், தேவைப்படும்போது அமைதிக்காக உலக நாடுகளுடன் சேர்ந்து மத்தியஸ்தம் செய்து வைக்க சீனா தயாராக இருக்கிறது. அதேபோல் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்குச் சீனா அனுப்பும்” என்றார்.
அதே நேரத்தில், சீனா – ரஷ்யாவிற்கு இடையில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிய வாங் யி, “நாடுகளுக்கு இடையே பனிப்போர் மனநிலையை மீண்டும் தூண்டிவிடப்படும் போக்கை சீனாவும் ரஷ்யாவும் கூட்டாக எதிர்க்கிறது” என்று அமெரிக்காவைக் குறிப்பிடாமல் கூறினார்.
முன்னதாக, உக்ரைன் விவகாரத்தில் மேற்கு நாடுகளின் எதிர்கால அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது சீனா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று பேட்டி ஒன்றில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு விவாகரத் தலைவர் ஜோசப் போரெல் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.