புதுடில்லி: உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் 50 நிமிடம் பேச்சு நடத்தினார். இதில், உக்ரைன் அதிபருடன் நேரடியாகப் பேச்சு நடத்துமாறு புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் சூழலில், இன்று (மார்ச் 7) காலை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக சுமார் 35 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக தற்போது ரஷ்ய அதிபர் புடின் உடனும் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். இரு நாட்டு தலைவர்களுடனான இந்த பேச்சு சுமார் 50 நிமிடம் நீடித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், மத்திய அரசு தரப்பில் கூறப்படுவதாவது: உக்ரைனில் நிலவிவரும் சூழ்நிலை குறித்து பிரதமர் மோடியும், புடினும் விவாதித்ததாகவும், உக்ரைன் மற்றும் ரஷ்ய குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்தும் பிரதமர் மோடியிடம் அதிபர் புடின் விளக்கியதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேலும், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் நேரடியாகப் பேச்சு நடத்துமாறு புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
சுமி உட்பட உக்ரைனின் சில நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தம் செய்யப்பட்டதை பிரதமர் மோடி பாராட்டினார். சுமி நகரில் இருந்து இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பையும் செய்வதாக பிரதமர் மோடிக்கு அதிபர் புடின் உறுதியளித்தார். இவ்வாறு கூறப்படுகிறது.
Advertisement