துபாயில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்குச் சென்ற இளையராஜா, ரஹ்மானின் துபாய் ஸ்டுடியோவிற்குப் போனது வைரலாகி இருக்கிறது. எப்போதும் பிரிந்து கிடக்கும் இரண்டு ரசிகர்களும் மனம் ஒன்றிப்போய் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு எப்படி நடந்தது, இதற்கு யார் பின்னணியில் உறுதுணையாக இருந்தார்கள் என விசாரித்தோம்.
ஆஸ்கர் விருதுகள் ரஹ்மானுக்குக் கிடைத்த பிறகு நடந்த இசை யூனியன் பாராட்டு விழாவில் இளையராஜா கலந்துகொண்டார். அதில் மனம் விட்டு ரஹ்மானை ராஜா பாராட்டியது இன்று வரை அவர்களது ரசிகர்களால் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. ராஜா துபாய்க்கு வரப்போகிறார் என்றதுமே அவர் தன் ஃபிர்தௌஸ் ஸ்டூடியோவுக்கு வர வேண்டும் என்று ரஹ்மானுக்கு ஆசை வந்திருக்கிறது. நேரடியாக ராஜாவிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, சந்தோஷமாக ஓகே சொல்லிவிட்டார் ராஜா. மளமளவென்று அவரை வரவேற்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார் ரஹ்மான்.
அவரை விமானநிலையத்திலிருந்து ஃபிர்தௌஸ் ஸ்டூடியோவிற்கு அழைத்து வருவது வரை செய்த ஏற்பாட்டில், பிரியத்தில் ராஜா நெகிழ்ந்துவிட்டாராம். ஃபிர்தௌஸ் ஸ்டூடியோவில் நுழைந்த ராஜா ஒரு மணி நேரத்திற்குமேல் அங்கே இருந்தாராம். அங்கே இருந்த அத்தனை வசதிகளையும் சுற்றிக் காட்டியிருக்கிறார் ரஹ்மான். அவரது அன்பான உபசரிப்பில் மகிழ்ந்த ராஜா, அவரோடு கொஞ்ச நேரம் தனியாகவும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக, அவர்களின் படத்துடன் ட்விட்டரில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், “மேஸ்ட்ரோ இளையராஜாவை எங்களின் ஃபிர்தௌஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி. எங்களின் ஃபிர்தௌஸ் ஆர்கெஸ்ட்ரா வாசிப்பதற்காக ராஜா ஏதேனும் பாடல்கள் இயற்றுவார் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்” என்று எழுதியிருந்தார்.
இதற்குப் பதில் ட்வீட் போட்ட இளையராஜா, “ரிக்வெஸ்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சீக்கிரமே இதற்கான கம்போசிங்கைத் தொடங்குகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த இரண்டு ட்வீட்களுமே தற்போது ரசிகர்களைப் படு குஷியில் ஆழ்த்தியுள்ளது. இது தவிர, நாம் விசாரித்ததில், ‘இளையராஜா – எம்.எஸ்.வி’ கூட்டணி அமைந்தது போல, ‘இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான்’ கூட்டணி சேர்ந்து ஒரு படம் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இரண்டு பேரின் ரசிகர்களுமே அத்தகையதொரு இணைப்பை விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ரஹ்மான் சென்னைக்குத் திரும்பியதும் இளையராஜாவின் புது ஸ்டுடியோவிற்கு போய் சுற்றிப் பார்ப்பார் என்கிறார்கள். நல்லது நடக்கட்டும்!