புதுடில்லி : வருமான வரித் துறையின் புதிய வலைதளம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை மிகச் சுலபமாக்கியுள்ளது.கடந்த 2017க்குப் பின், வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை சுலபமாக்கும் நோக்கில், 2021 ஜூலையில் புதிய வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
துவக்கத்தில் கணக்கு தாக்கலின் போது ஏற்பட்ட சில பிரச்னைகள் சரி செய்யப்பட்ட பின், தற்போது இந்த வலைதளம் மிக விரைவாக செயல்பட்டு வருகிறது. இந்த வலைதளத்தில் உள்ள வசதியால், வருமான வரிதாரர்கள் தங்களுக்கு உரிய படிவத்தை சுலபமாக தேர்வு செய்ய முடிகிறது. அத்துடன் வருமானத்திற்குரிய வரியை கணக்கிடுவது, முதலீடுகள் மீதான கழிவுகள் உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்வது போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நாம் அளிக்கும் தகவலுக்கு ஏற்ப, கணக்கு தாக்கல் படிவத்தில் தன்னிச்சையாக வரி விபரங்கள், கழிவுகள் ஆகியவை பூர்த்தி செய்யப்படுகின்றன. இதனால் சில நிமிடங்களில் கணக்கு தாக்கல் பணியை முடித்து விடலாம்.கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்கு முதலீட்டிற்கு தேவையான, ‘டீமேட்’ கணக்குகளை நான்கு கோடிக்கும் அதிகமானோர் துவக்கிஉள்ளனர்.
இத்தகையோருக்காக ஏ.ஐ.எஸ்., / டி.ஐ.எஸ்., என்ற பிரிவுகள் உள்ளன. இதில், வருமான வரித் துறையிடம் தரப்பட்ட தகவலும், தங்களிடம் உள்ள விபரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வலைதளத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும், ‘சாட்பாட்’ வசதி உள்ளது. வருமான வரி கணக்கை எப்படி தாக்கல் செய்வது என்பதை படிப்படியாக விவரிக்கும் ‘வீடியோ’ வசதியும் உள்ளது.ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் உள்ள புதிய வலைதளத்தில் கணக்கு தாக்கல் செய்யப்பட்ட அன்றே பரிசீலனை தொடர்பான விபரம், ‘ரீபண்டு’ பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
Advertisement