புதுடெல்லி: சென்னை அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது மகன் சதீஷ்குமார்(24). இவர் கடந்த 2011ல் மாயமானார். அவரது உடல் அதே ஆண்டு ஜூலை 13ம் தேதி சென்னை ஐ.சி.எப் வடக்கு காலனி ஏரியில் மீட்கப்பட்டது. மேலும் சதீஷ்குமாரின் சட்டை பாக்கெட்டில் இரண்டு பிளேடுகள் மற்றும் கழுத்தில் நான்கு வெட்டுக் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சதீஷ்குமார் மரணம் தற்கொலை என சிபிஐயும், கொலை என சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனால் மர்மம் நீடித்து வந்த நிலையில், இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சங்கரசுப்பு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் , சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பசந்த், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் பிரபாகரன் மற்றும் ராம்சங்கர் ஆகியோர் ஆஜராகி, ‘‘சிபிசிஐடி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து எந்த ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. அதனால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது’’ என தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், ‘‘வழக்கை சரியான கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர்’’ என்றார். இதற்கு நீதிபதிகள், ‘‘வழக்கின் முழு விவரங்கள் அடங்கிய விரிவான நிலை அறிக்கையை ஒரு மாதத்தில் தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரே தொடர்ந்து நடத்தலாம். தடைகிடையாது’’ என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.