வேலை வாங்கித்தருவதாகக் கூறி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா என்பவர், வீட்டு வேலைக்குக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுள்ளார். சாந்தா அந்தச் சிறுமியை கீழப்பழுவூரைச் சேர்ந்த சந்திரா என்பவரிடம் ஒப்படைத்துள்ளார்.
அந்தப் பெண் சிறுமிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், சந்திரா அந்தச் சிறுமியை அரியலூர் மாவட்டம் மற்றும் தஞ்சையில் சில இடங்களில் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தி, சிறார் வதை செய்திருக்கிறார்.
இந்த பாலியல் வன்கொடுமை தொடரவே, சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. அதனால், சந்திரா அவரை அவர் பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார்.
சிறுமியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் அவர் பெற்றோர் சேர்த்தபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சந்திரா, சாந்தா ஆகியோர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானது. அதையடுத்து, சந்திரா, சாந்தா உட்பட குற்றச் சம்பவத்துக்கு உடந்தையாக 9 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் சுமதியிடம் பேசினோம். “சாந்தா, சந்திரா ஆகிய இரு பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள். அவர்களில் சாந்தா என்பவர் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், அந்தச் சிறுமி வேலைக்காக அவரை நாடி வந்திருக்கிறார்.
அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இருவரும், அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கின்றனர். தற்போது சிறுமியின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு 9 பேரைக் கைது செய்திருக்கிறோம்” என்றார்.