5 மாநில கருத்துக் கணிப்பு முடிவுகள்… பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி கட்சி

புதுடெல்லி:
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இன்று அந்த மாநிலத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாகவே உள்ளன.
இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 76 முதல் 90 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 9 முதல் 31 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம்  கூட்டணி 7 முதல் 11 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 1 முதல் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி-சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 51 முதல் 61 இடங்கள் வரையில் பிடிக்கலாம் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் 22 முதல் 28 தொகுதிகளும், சிரோமணி அகாலி தளம் கூட்டணி 20 முதல் 26 தொகுதிகள் வரையிலும், பாஜக 20 முதல் 26 தொகுதிகள் வரையிலும் கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பிலும் ஆம் ஆத்மிக்கே அதிக தொகுதிகள் கிடைக்கும் எனதெரியவந்துள்ளது. ஆம் ஆத்மி 70 தொகுதிகளிலும், காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம், பாஜக தலா 19 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 100 இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 10 இடங்களை பிடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில் டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட சில நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் பாஜக 37 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 31 தொகுதிகளையும், ஆம் ஆத்மி 1 தொகுயையும் பிடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வேறு சில நிறுவனங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன. 
சில கருத்துக் கணிப்பு முடிவுகள் கோவாவில் தொங்கு சட்டசபை அமையும் என தெரிவிக்கின்றன. மணிப்பூரில் பாஜக எதிர்க்கட்சிகளை விட அதிக தொகுதிகளை கைப்பற்றும் என சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.