5 மாநில தேர்தல் முடிவுகள்: ஜனாதிபதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா..?

புதுடெல்லி, 
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த தேர்தலில் பா.ஜனதா முன்னிலை பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. இந்த தேர்தல் முடிவுகள் 10-ந் தேதி வெளியாகின்றன.
இந்த 5 மாநில தேர்தல் வெறும் அந்தந்த மாநிலங்களுக்கான முதல்-மந்திரியை முடிவு செய்வது மட்டுமின்றி, நாட்டின் அடுத்த ஜனாதிபதியையும் தீர்மானிக்கும் தேர்தலாக அமைந்து உள்ளது.
இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அதற்கு முன் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும்.
நாட்டின் முதல் குடிமகனை தேர்வு செய்யும் இந்த தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.
சட்ட மேலவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நியமன உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.
அதன்படி ஜனாதிபதியை தேர்வு செய்யும் ‘எலக்டோரல் காலேஜ்’ எனப்படும் வாக்காளர் குழுவில், மக்களவையின் 543 எம்.பி.க்கள், மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மற்றும் 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 வாக்காளர்கள் உள்ளனர்.
அதேநேரம் இந்த வாக்காளர்கள் ஒவ்வொருவரின் வாக்கு மதிப்பும் வேறுபட்டதாகும். அந்தவகையில் ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 708 ஆகும். ஆனால் மாநிலங்களின் மக்கள் தொகை (1971-ம் ஆண்டு கணக்கெடுப்பு) அடிப்படையில் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு வேறுபடுகிறது.
அதிகபட்சமாக உத்தரபிரதேச எம்.எல்.ஏ. ஒருவரின் ஒட்டு மதிப்பு 208 ஆகும். குறைந்தபட்சமாக சிக்கிம் எம்.எல்.ஏ. ஒருவரின் ஓட்டு மதிப்பு வெறும் 7 ஆகும்.
இவ்வாறு மொத்தமுள்ள 4,896 வாக்காளர்களின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10,98,903 ஆகும். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு மட்டுமே 1,431 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 334 மக்களவை எம்.பி.க்களும், 115 மாநிலங்களவை எம்.பி.க்களும் உள்ளனர். எனினும் 9 மாநிலங்களவை எம்.பி.க்கள் நியமன பதவியில் இருப்பதால் அவர்களால் வாக்களிக்க முடியாது.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என தெரிகிறது. ஆனால் அது முடியாதபட்சத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதா வேட்பாளரை நிறுத்தும்.
தற்போதைய நிலையில் 5 மாநில தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் நிலையில் பா.ஜனதா உள்ளது. கூட்டணியில் இல்லாத நட்பு கட்சிகளையும் சேர்த்தால் இந்த தேர்தலில் எளிதாக அதனால் வெற்றி பெற முடியும்.
ஆனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பலத்த அடி விழுந்தால் அது ஜனாதிபதி தேர்தலில் பெரும் அக்னிபரீட்சையை ஏற்படுத்தும்.
ஏனெனில் தேர்தல் நடைபெறும் உத்தரபிரதேசத்தில் 403 எம்.எல்.ஏ. இடங்கள் உள்ளன. இங்கு ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பு 208 ஆக உள்ளது. மாநில சட்டசபையின் மொத்த ஓட்டு மதிப்பு 83,824 ஆகும்.
இதைப்போல பஞ்சாப் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 116 ஆகவும் (மொத்த மதிப்பு 13,572), உத்தரகாண்டில் 64 ஆகவும் (4480), கோவாவில் 20 ஆகவும் (800), மணிப்பூரில் 18 ஆகவும் (1080) உள்ளது.
இவ்வாறு கணிசமான வாக்குகளை கொண்டிருக்கும் இந்த மாநிலங்களில் பா.ஜனதா தோல்வியை தழுவினாலோ அல்லது அதிகபட்சமான இடங்களை பெறாவிட்டாலோ ஜனாதிபதி தேர்தலில் அந்த கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும்.
அப்படிப்பட்ட சூழல்நிலையில் பிஜூ ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியிருக்கும். அதேநேரம் இந்த கட்சிகள் எதிர்க்கட்சி கூடாரங்களில் ஐக்கியமாகவும் வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில் ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ், எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருவதும் கவனிக்கத்தக்கது.
இதைப்போல எதிர்க்கட்சிகளும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை பொது வேட்பாளராக அறிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியை உடைக்கும் முயற்சியில் உள்ளன.
இந்த சூழலில், நடைபெற்று வரும் 5 மாநில தேர்தல் பா.ஜனதாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநிலங்களில் வெற்றி பெற்று ஜனாதிபதி தேர்தலில் அந்த கட்சி முன்னிலை பெறுமா? என்பது 10-ந் தேதி தெரியவரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.