ஆம் ஆத்மி
கட்சிக்கு பஞ்சாபில் மட்டுமே மக்கள் மவுசு கிடைத்திருப்பதை எக்ஸிட் போல் முடிவுகள் காட்டுகின்றன. மற்ற 4 மாநிலங்களில் அந்தக் கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
5 மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாகின. இதில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர பிற மாநிலங்களில் மீண்டும் பாஜகவே ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் தெரிய வந்துள்ளது.
இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மிக்கு ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே சந்தோஷம் கிடைத்துள்ளது. அது பஞ்சாப் மாநிலம். இந்த முடிவு அக்கட்சியினரால் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தாலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸை வீழ்த்தி விட்டு, பாஜகவை சமாளித்து விட்டு, அகாலிதள சவாலையும் கடந்து, மிகப் பெரிய வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பெறவுள்ளது. இந்த மாநிலத்தில் அக்கட்சிக்கு அதிகபட்சம் 70 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகளும் ஒரே சேர கூறியுள்ளன. இதனால் பஞ்சாப் மாநிலம் புதிய மாற்றத்தைக் காணும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைக்கிறது. இது நடந்தால், பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து ஒரே கட்சி ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில்ஆட்சியமைப்பது இதுவே முதல் முறை என்ற புதிய வரலாற்றை ஆம் ஆத்மி கட்சி பெறும். இந்திய வரலாற்றில் பாஜக, காங்கிரஸ் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ஆம் ஆத்மி கட்சி இணையவுள்ளது அக்கட்சி வரலாற்றில் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமையும்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டு பணியாற்றியது. அங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். ஆனால் அந்தக் கோபத்தை கட்சி மேலிடம் உரிய நேரத்தில்உணரத் தவறி விட்டது. மாறாக மிக மிக தாமதமாக அமரீந்தர் சிங் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால் இன்னொரு தவறாக சித்துவை தலைவராக்கியது காங்கிரஸ் மேலிடம். இது சரியான விளைவை அக்கட்சிக்குத் தரவில்லை.
இப்படி காங்கிரஸ் தரப்பில் நடந்த அத்தனைக் குழப்பங்களையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது ஆம் ஆத்மி கட்சி. இதை வைத்து அது அழகாக காய் நகர்த்தியது. இப்போது அக்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
அதேசமயம், பஞ்சாப் தவிர்த்து பிற நான்கு மாநிலங்களில் அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. உ.பியில் அக்கட்சிக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் 2 முதல் 4 சீட் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தரகாண்ட்டிலும் கூட அதே சிங்கிள் டிஜிட்தான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று எக்ஸிட் போல் முடிவுகள் கூறியுள்ளன.
டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபில் கால் ஊன்றியுள்ள ஆம் ஆத்மி அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்திலும், கோவாவிலும் தனது தீவிர கவனத்தை செலுத்தும் என்று தெரிகிறது. இந்த தேர்தலில் அக்கட்சிக்கு அங்கு பெரிய வெற்றி கிடைக்காவிட்டாலும் கூட அது அங்கு தனது ஆரம்பத்தை இத்தேர்தலில் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!