கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில் பெற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் பாஜகவுக்கு 3 பெரிய மாநிலங்களில் இந்த முறை குறைந்த இடங்களே கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிய வருகிறது.
உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் இன்றோடு முடிவடைந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும், எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாஜகவே ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பஞ்சாபில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் நிலை உள்ளது.
கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில் உ.பியில் மொத்தமாக 325 இடங்களை
பாஜக
கூட்டணி பெற்றது. ஆனால் தற்போதைய கருத்துக் கணிப்புகள் பலவற்றிலும் பாஜகவுக்கு மொத்தமாக 250 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த முறையை விட இந்த முறை கிட்டத்தட்ட 50 இடங்கள் வரை பாஜக குறைந்து பெற வாய்ப்புள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுவதையே இது சுட்டிக் காட்டுவதாக கருதப்படுகிறது. அதே போல சமாஜ்வாடிக் கட்சியும் பலமடைந்திருப்பதையும் இது உணர்த்துகிறது. சமாஜ்வாடியின் பலமே, பாஜகவின் பலவீனமாக மாறியுள்ளது.
மேலும் காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சிகளையும் மொத்தமாக காலிசெய்து அந்தப் பலத்தையும் சமாஜ்வாடியே அறுவடை செய்திருப்பதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். முஸ்லீம்களின் அதிருப்தி, விவசாயிகளின் அதிருப்தி ஆகியவை பாஜகவுக்கு எதிராகவும், சமாஜ்வாடிக்கு ஆதரவாகவும் மாறியுள்ளன.
அதேசமயம், தலித் வாக்குகளைக் கூட பகுஜன் சமாஜ் கட்சி இழந்திருப்பதையும் இந்த எக்ஸிட் போல்முடிவுகள் காட்டுகின்றன. காங்கிரஸுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. இருப்பது எல்லாவற்றையும் அக்கட்சி இழந்திருப்பதாகவே உணர முடிகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த முறை பாஜகவுக்கு 57 இடங்கள் கிடைத்தன. ஆனால் இந்த முறை அதிகபட்சம் 37 இடங்களைப் பெறவே வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்திலும் கடந்த தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 18 இடங்கள் கிடைத்தன. ஆனால் இந்த முறை அகாலிதளம் கூட்டணியை விட்டு விலகியதால் பலமிழந்த நிலையில் அமரீந்தர் சிங்குடன் இணைந்து பாஜக போட்டியிட்டது. அதற்கு 2 முதல் 6 சீட்டுகளே கிடைக்கும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் கடந்த முறை பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைத்தன. இந்த முறை அதை விட கூடுதலாக 27 முதல் 32 இடங்கள் வரை அது பெற வாய்ப்புள்ளது. அதேபோல கோவாவில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இருந்தாலும் கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் இடங்களைப் பெற பாஜகவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த முறை 13 இடங்களை மட்டுமே வென்ற பாஜக இந்த முறை 15 முதல் 21 இடங்கள் பெற வாய்ப்புள்ளதாம்.
ஆக, பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு சரிவு ஏற்பட்டாலும் கூட கோவா, மணிப்பூரில் அது சற்று பலம் பெற்றுள்ளதையும் எக்ஸிட் போல் முடிவுகள் காட்டுகின்றன. ஆனால் பெரிய மாநிலங்களில் அதற்கு சரிவு ஏற்பட்டிருப்பது ஆபத்தானது என்பதையும் பாஜக தலைவர்களுக்கு இந்த முடிவுகள் சுட்டிக் காட்டுவதாக உள்ளன. குறிப்பாக உ.பியில் பாஜக சரிவைக் கண்டிருப்பது நாடாளுமன்றத் தேர்தலில் பாதக நிலையை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.