கோவா சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும்
திரினமூல் காங்கிரஸ்
கட்சி அங்கு கிங் மேக்கராக உருவெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கோவாவில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.. கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ்தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் பாஜக பல்வேறு கோல்மால்களைச் செய்து ஆட்சியைக் கைப்பற்றி விட்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்குத் தாவியதால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது நடந்துள்ள தேர்தலில் அங்கு பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் கூறியுள்ளன. கடந்த தேர்தலை விட இந்த முறை பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், காங்கிரஸும், பாஜகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கிறது. எனவே தொங்கு சட்டசபை அமையும் வாய்ப்புகளையும் மறுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் அங்கு திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை திரினமூல் காங்கிரஸ் கோவாவில் போட்டியிட்டதில்லை. ஆனால் இந்த முறை அங்கு அது மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் தனது கட்சிக்கு இழுத்து தேர்தலை சந்தித்தது மமதா கட்சி.
இந்த நிலையில் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு இத்தேர்தலில் 5 முதல் 9 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக ஏபிபி நியூஸ் எக்ஸிட் போல் முடிவுகள் கூறியுள்ளன. அப்படி நடந்தால் மமதா கட்சி கோவாவில் அடுத்த ஆட்சியாளரை முடிவு செய்யும் கிங் மேக்கராக உருவெடுக்கும் வாய்ப்புள்ளது.
ஏபிபி எக்ஸிட் போலில், பாஜகவுக்கு அதிகபட்சம் 17 இடங்களும், காங்கிரஸுக்கு 16 இடங்களும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அப்படி நடந்தால் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை காங்கிரஸ் கோர வாய்ப்புள்ளது. மமதாவும் ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது. காரணம், பாஜக வருவதை இரு கட்சிகளுமே விரும்ப மாட்டார்கள். அப்படி நேரும் பட்சத்தில் காங்கிரஸ் – திரினமூல் காங்கிரஸ் கூட்டணி அரசு கோவாவில் அமையலாம்.
அதேசமயம், கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் பாஜக திகிடுத்தங்கள் செய்து எம்எல்ஏக்களை கட்சி தாவச் செய்து ஆட்சியமைக்கும் வாய்ப்புகளையும் மறுக்க முடியாது. ஆம் ஆத்மிக்கும் இங்கு 5 சீட் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. மற்றவர்களுக்கு 2 சீட் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே கிடைக்கும் எம்எல்ஏக்களைத் திரட்டி மீண்டும் ஆட்சியமைக்க பாஜக கண்டிப்பாக முயலும் என்பதால் கோவாவில் தேர்தலுக்குப் பின்னர் கிடைக்கப் போகும் முடிவு இப்போதே எதிர்பார்ப்புகளைத் தூண்டி விட்டுள்ளது.
கோவா தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் ரிசார்ட்டுகளுக்குப் படையெடுக்கும் வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை!