இலங்கை அணியை இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது ரோஹித் தலைமையிலான இந்திய படை. கடந்த வெள்ளியன்று தொடங்கிய இப்போட்டியானது இந்திய அணியின் ஸ்பின்னர்களின் அபார பந்துவீச்சில் மூன்றே நாளில் முடிவுக்கு வந்திருக்கிறது.
நேற்றைய நாளின் தொடக்கத்தில் 108/4 என்று இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் அசலங்கா மற்றும் நிசங்கா ஆகியோர் சிறப்பாகவே ஆடினர். 58 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் இந்த ஜோடியை பிரித்தார் பும்ரா. அடுத்த வந்த ஐந்து பேட்ஸ்மேன்களில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவை மட்டுமே ரன் கணக்கை தொடங்க அனுமதியளித்தனர் இந்திய பௌலர்கள். 58 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்த இலங்கை மீதமுள்ள 5 விக்கெட்டுகளை அடுத்த 6 ஓவரில் இழந்து 174 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
சுமார் 400 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் பெற்ற இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் பெரிய மாற்றம் ஏதும் நடந்திடவில்லை. குறிப்பாக ஜடேஜா, அஷ்வின் ஆகிய இருவரின் சூழலுக்கும் அந்த அணி பேட்டர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. முதல் இன்னிங்ஸில் நிசங்கா அரைசதம் அடித்ததை போல இரண்டாவது இன்னிங்ஸில் டிக்வெல்லாவின் பேட்டிங் மட்டுமே இலங்கை ஆறுதலாக அமைந்தது. மற்ற யாருமே நிலையாக களத்தில் நின்று பெரிய பங்களிப்பை அளிக்காததால் இறுதியில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை.
இரண்டாது இன்னிங்ஸில் நிசங்காவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கபில்தேவின் 434 விக்கெட்டுகளை பின்னுக்குத் தள்ளி அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இந்திய பௌலர்களில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் அஷ்வின். “என்னை பொறுத்தவரையில் அஷ்வின் ஒரு தலைசிறந்த வீரர். இந்திய அணிக்காக பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மிகச் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் வீரர் அவர்” என்று போட்டிக்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் புகழாரம் சூட்டினார்.
இன்னொரு பக்கம் பேட்டிங்கில் 175 ரன்கள், இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து பௌலிங்கில் 9 விக்கெட்டுகள் என தன் டெஸ்ட் கரியரின் மிகச் சிறந்த போட்டியாக ஜடேஜாவிற்கு இந்த ஆட்டம் அமைந்தது. 2017-ம் ஆண்டிற்கு பிறகான ஜடேஜாவின் பேட்டிங் என்பது மேல் நோக்கியே பயணித்து வருகிறது. இதையே தான் கேப்டன் ரோஹித்தும் கூறினார். “ஒவ்வொரு போட்டியிலும் தன் ஆட்டத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறார் ஜடேஜா. வெற்றிக்கான தீர்க்கமுடியாத பசி அவரிடம் உள்ளது. அப்பசிதான் விளையாட்டு வீரர்களை முன் நகர்த்திச் செல்லும் ஒன்றாகும்” என்று கூறிய ரோஹித், ஜடேஜாவின் பேட்டிங்கால் அணிக்கு ஏற்படும் பேலன்ஸ் பற்றியும் பேசியுள்ளார்.
“டி20 தொடரின் போதும் பேட்டிங் ஆர்டரில் மேலே ஆடுகிறாயா என்று அவரிடம் இயல்பாகவே கேட்டேன். புதிய சவால்களுக்கு என்றும் தயாராக இருக்கும் அவர் அதை உடனே ஏற்றுக்கொண்டார். அவரின் பௌலிங் பற்றி அனைவரும் அறிவர். ஒரு கேப்டனாக ஜடேஜாவின் பேட்டில் இருந்து அதிக பங்களிப்பை பெறுவதே என் கடமை. அது அணியின் பேலன்சிற்கு பெரும் உதவியாய் இருக்கிறது. இதே போல மற்ற பௌலர்களும் நெட்ஸில் பேட்டிங் ஆடி தங்களது திறனை மேலும் முன்னேற்றினால் அணிக்கு பேருதவியாய் இருக்கும்” என்று கூறினார்.
அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 12-ம் தேதி பெங்களூரு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவிருக்கிறது.