தன் கைகள்மீது தாயால் எழுதப்பட்ட கடிதம் அழியாமல் கவனித்துக் கொண்டு, யுத்த பூமியில் தன்னந்தனியாக 1,400 கிலோமீட்டர் தூரம் பயணித்து உக்ரைன் எல்லையையைக் கடந்து ஸ்லோவாகியாவை அடைந்திருக்கும் 11 வயது சிறுவனின் உத்வேகம், உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக, உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று 13-வது நாளாகத் தொடர்கிறது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் எனப் பல நகரங்களிலும் சிக்கியுள்ள மக்கள் உயிர் பிழைக்க வேண்டி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்று வருகின்றனர். இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறினாலும், தங்களது நாட்டை மீட்டெடுப்போம் என்ற உறுதியில் இன்னமும் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டை வெளியேறாமல் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது, மனைவி, மகள், மகன் ஆகியோரை அண்டை நாடுகளுக்கு அனுப்பிவைத்து பெரும் நம்பிக்கையுடன் உக்ரைனில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தனது பெற்றோர் உக்ரைனிலேயே இருக்க வேண்டிய சூழலால், 11 வயது சிறுவன் ஒருவன் தனியாக யாருடைய துணையும் இல்லாமல் அண்டை நாடான ஸ்லோவாகியாவுக்கு சென்றடைந்திருக்கிறான். இந்த 1,400 கிலோமீட்டர் தூரப் பயணம் அசாதரணமானது.
உக்ரைனின் கிழக்கு நகர பகுதியான சாபோரோஜியேவிலிருந்து அண்டை நாடான ஸ்லோவாகியாவுக்கு யாருடைய துணையும் இல்லாமல் அந்தச் சிறுவன், உக்ரைன் சென்றிருக்கும் செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இதுகுறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம் தரப்பில் கூறும்போது, “உக்ரைனிலிருந்து ஸ்லோவாகியாவுக்கு தனியாக பயணம் மேற்கொண்ட சிறுவன் பாதுகாப்பாக ஸ்லோவாகியா சென்றடைந்தான். அவன் நலமாக இருக்கிறான். அவன் அனைவரையும் தனது புன்னகையால் வென்றான். தன்னார்வலர்கள் சிறுவனுக்கு உணவும், தண்ணீரும் வழங்கினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனை பாதுகாத்த தாயின் கடிதம்: சிறுவனின் கையில் அவன் போய் சேர வேண்டிய இடம் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்களை அவனது தாயார் எழுதி இருந்தார். இதன் மூலமாகவே சிறுவன் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டான் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, கடந்த பத்து நாட்களில் மட்டும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான உக்ரைன் மக்கள் நாட்டைவிட்டு, அகதிகளாக வேறு நாடுகளுக்கு சென்றடைந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.