மாஸ்கோ: உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து பொருளாதார தடைகளை விதித்துள்ள ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்த நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய துணை பிரதமரும் எரிசக்தி துறை அமைச்சருமான அலெக்சாண்டர் நோவக் கூறியதாவது: ரஷ்ய பொருளாதாரம் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. பொருளாதாரத்தடை விதித்துள்ள ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்த நேரிடும். ஆனால், தற்போது வழங்கப்பட்டு வரும் விநியோகத்தை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. முழு அளவில் விநியோகம் நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவில் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தடை விதித்தால், எங்களது கச்சா எண்ணெயை விற்பதற்கு வேறு வழிகள் உண்டு. ஆனால், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை ஒதுக்கி வைத்தால், உலகச்சந்தையில், உலக பொருளாதாரத்தில் பேரழிவுகளை சந்திக்க நேரிடும். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 300 அமெரிக்க டாலருக்கு மேல் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement