இரண்டு வருடங்களாக கவனிக்கப்படாமல் கிடக்கும் அய்யப்பனும் கோஷியும்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். பிரித்விராஜ், பிஜுமேனன் இணைந்து நடித்திருந்த இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதன் ரீமேக் உரிமைகள் பெரிய அளவில் விலை போயின. எப்போதுமே ரீமேக்குகளில் மெதுவாகவே கவனம் செலுத்தும் தெலுங்கு திரையுலகம் இந்த படத்தை பீம்லா நாயக் என்கிற பெயரில் பவன்கல்யாண், ராணா நடிப்பில் உருவாக்கி சமீபத்தில் வெளியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது.
அதே சமயம் முதன்முதலில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் இதன் ரீமேக் வேலைகளை இன்னும் துவங்கவே இல்லை. அவர் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை தானே இயக்கி வருவதால் முழு கவனத்தையும் அதிலேயே செலுத்தி வருகிறார். தெலுங்கில் இதன் ரீமேக் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தமிழிலும் இந்த படத்தை உடனடியாக ரீமேக் செய்யும் வேலைகளை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
இந்த படத்திற்கு கதை எழுதி, மலையாளத்தில் இயக்கிய மறைந்த இயக்குனர் சாச்சி, தமிழில் பார்த்திபனும் சசிகுமாரும் இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என அந்த சமயத்திலேயே கூறியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆடுகளம் கதிரேசன் சாச்சியின் கருத்தையும் ரசிகர்களின் கருத்தையும் கவனத்தில் கொள்வாரா ? பார்க்கலாம்.