உக்ரைன் ராணுவத்தில் தமிழக இளைஞர் இணைந்தது தொடர்பில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா 13வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் என்ற விமானவியல் மாணவர் உக்ரைன் நாட்டின் துணை ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக போரிட்டு வருவது தெரியவந்துள்ளது.
இது குறித்து மத்திய,மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இவரின் வீட்டில் ரா அதிகாரிகள் அதிக அளவில் குவிந்து உள்ளனர். கோவை மாணவர் எப்படி உக்ரைன் சென்றார், எப்போது சென்றார் என்ற விவகாரங்களை எல்லாம் சேகரித்து வருகின்றனர்.
சிறு வயது முதலே இராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பி இருக்கிறார் சாய்நிகேஷ்.
ஆனால் உயரம் குறைவாக இருந்த காரணத்தால் அவரின் விருப்பம் நிறைவேறவில்லை.
இதையடுத்தே உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளார்.
அவரது வீட்டில் சோதனை செய்த போது ஏராளமான ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அதேபோல் துப்பாக்கிகள், குண்டுகள் குறித்து நிறைய ராணுவ ரீதியான விவரங்களை, புள்ளி விவரங்களை சேகரித்து அதை வீட்டில் வைத்து படித்து இருக்கிறார்.
ராணுவ ரீதியான படங்களையும், கேம்களை கூட ஆடி இருக்கிறார்.
இவரை நாட்டிற்கு கொண்டு வர ரா முயன்று வருகிறது. ஏனென்றால் உக்ரைன் – ரஷ்யா போரில் இந்தியா நடுநிலையாக உள்ளது. இப்போது இந்தியர் ஒருவர் உக்ரைனில் போரிடுவது இந்தியாவிற்கு சிக்கலாக மாறும்.
இதனிடையில் வீடியோ அழைப்பின் மூலம் நிகேஷ் இன்று தனது பெற்றோர்களிடம் பேசியுள்ளார். அப்போது தான் உக்ரைனில் இருந்து ஊருக்கு வர விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.