புதுடில்லி : உக்ரைனில், ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங், நேற்று சிறப்பு விமானத்தில் இந்தியா வந்தடைந்தார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், ரஷ்ய படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
உக்ரைனில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள், அதன் அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து சிறப்பு விமானங்கள் வாயிலாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இந்நிலையில், ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா, போலந்து ஆகிய நாடுகளில் இருந்து, நேற்று ஏழு விமானங்கள் இந்தியாவுக்கு வந்தன. அவற்றில், 1,314 இந்தியர்கள் வந்திறங்கினர்.
இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவில், ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங், நேற்று இந்தியா வந்தடைந்தார்.உக்ரைனில் இருந்து போலந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹர்ஜோத் சிங், அங்கிருந்து மற்ற இந்தியர்களுடன், சிறப்பு விமானத்தில் புறப்பட்டு, நேற்று மாலை 6:15 மணிக்கு, உத்தர பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் வந்திறங்கினார்.
அங்கிருந்து அவர் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த தகவலை, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார்.
Advertisement