வாஷிங்டன்: உக்ரைனுக்கு உதவிட 723 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5,560.19 கோடி) கடன்கள் மற்றும் மானியங்களின் தொகுப்பை வழங்க இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 13வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களில் தாக்குதல் நடப்பதால் அங்கிருக்கும் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 15 லட்சம் மக்கள் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் சில நகரங்களில் பொதுமக்கள் வெளியேற தற்காலிக போர் நிறுத்தத்தையும் ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய தாக்குதலால் உருகுலைந்த உக்ரைனுக்கு உதவ 723 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 5,560.19 கோடி ரூபாய்) கடன்கள் மற்றும் மானியங்களின் தொகுப்பை வழங்க இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக உலக வங்கி அறிவித்தது.
இந்த தொகுப்பில், முந்தைய உலக வங்கி கடன் 350 மில்லியன் டாலரும் அடங்கும். இத்துடன் நெதர்லாந்து மற்றும் ஸ்வீடனின் கடன் உத்தரவாதங்கள் மூலம் சுமார் 139 மில்லியன் டாலர் அதிகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டன், டென்மார்க், லாட்வியா, லித்துவேனியா மற்றும் ஐஸ்லாந்தின் நாடுகளிலிருந்து மானியங்களாக 134 மில்லியன் டாலரும், ஜப்பானில் இருந்து 100 மில்லியன் டாலர் நிதியுதவியும் இடம்பெற்றுள்ளது.
Advertisement