உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள மாணவர்களை மீட்பதில் இந்தியாவுக்கு கடும் சவாலாக உள்ளது. கடந்த 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கியது. இரண்டு நாட்கள் கழித்து 26-ந்தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் மோடி டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தது தொடர்பாக பேசியதாக கூறப்பட்டது.
கீவ், கார்கிவ் நகரில் இருந்து ஏராளமான மாணவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமி நகரில் தற்போது சண்டை அதிகரித்துள்ளது. அங்குள்ள மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கி 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில், மாணவர்கள் கடுங்குளிர், உணவு தட்டுப்பாடு, தண்ணீர் வசதியின்றி தவித்து வரும் நிலை உருவாகியுள்ளது.
சுமியில் இருந்து மாணவர்கள் உடனடியாக வெளியேற தயாராகும்படி கேட்டுக்கொள்ளப்படடுள்ளது. சுமியில் இருந்து மூன்று மணி நேரம் பயணத் தூரத்தில் உள்ள போல்டாவாவிற்கு வர வலியுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு வந்தால் இந்திய அதிகாரிகள் எளிதாக இந்தியாவுக்கு அழைத்து வந்து விடுவார்கள். சுமியில் இருந்து வெளியேறுவது தற்போதைய நிலையில் எளிதான காரியம் அல்ல. இந்த நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மாணவர்கள் தாங்கள் ரஷிய எல்லையில் இருந்து 50 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறோம். கடினமான ரஷிய எல்லை வழியாக வெளியேற தீர்மானித்துள்ளோம் என வீடியோவில் பதிவிட்டிருந்தனர். ஆனால், மத்திய அரசு அதிகாரிகள் தேவையற்ற ரிஸ்க் எடுக்க வேண்டாம் எனக் கூறியதால், மாணவர்கள் அங்கேயே உள்ளனர்.
இதையும் படியுங்கள்… உக்ரைனில் இருந்து இதுவரை 15,920 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் – மத்திய அரசு