சென்னை: அண்ணா அறிவாலயத்தில், திமுக மகளிரணி சார்பில் உலக மகளிர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், திமுக மக்களவை எம்பி கனிமொழியுடன், கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதேவிழாவில் கலந்துகொண்ட முதல்வர் முக ஸ்டாலின், சைலஜா டீச்சரை வெகுவாக பாராட்டி பேசினார்.
அதில், “மகளிர் சகோதரிகள் முன்மாதிரியாக கொள்ள வேண்டிய ஷைலஜா டீச்சர் இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த ஷைலஜா டீச்சர், பொதுவுடைமைக் கருத்தியலால் ஈர்க்கப்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர். அவரது கொள்கைப் பிடிப்பும், அயராத உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும்தான் அவரை தோழர் பினராயி விஜயனின் அரசில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக்கியது.
அந்தப் பொறுப்பில் இருந்து, அவர் கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்ட விதத்தை நாடே பாராட்டியது. எனக்கு எல்லாம் கூட அந்த கரோனா பெருந்தொற்றில் இவ்வளவு வேகம் வரக் காரணம், உங்களுடைய பணியைப் பார்த்து தான் இந்த வேகமே வந்தது. உலக அளவிலான தொலைக்காட்சிகள் எல்லாம் பாராட்டினார்கள். அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமான மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக அவர் விளங்கினார்.
உழைப்பிற்கு மட்டுமில்லாமல், கொடுக்கப்பட்ட பொறுப்பில் பெண்கள் எத்தகைய திறமையோடு செயல்படுவார்கள் என்பதற்கு இங்கு அமர்ந்திருக்கும் ஷைலஜா டீச்சர் அவர்களே சாட்சி. அவருக்கு உங்கள் அனைவரின் சார்பில், தமிழ்நாட்டு மக்கள் சார்பில் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.