உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் இருக்கின்றன. அதிக சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமின்றி, அதிக மக்களவைத் தொகுதிகளைக்கொண்ட மாநிலம் என்பதால் இந்த மாநிலத் தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணி – 288 முதல் 326 இடங்கள் வரையும், சமாஜ்வாடி கூட்டணி – 71 முதல் 101 இடங்கள் வரையும், பகுஜன் சமாஜ் – 3 முதல் 9 இடங்களும், காங்கிரஸ் – 2 முதல் 3 இடங்களும் பெறும் எனத் தெரிவித்துள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாவது, “கருத்துக்கணிப்புகள் முக்கியமில்லை. அவை பா.ஜ.க வெற்றி பெற்றதாகக் காட்டட்டும். ஆனால், உத்தரப்பிரதேச தேர்தலில் பெரும்பான்மையுடன் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். சமாஜ்வாடி தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ.க பிரசாரத்தின் போது பொய்கள் மற்றும் போலியான தரவுகளை முன்வைத்தது. அதனால், மக்கள் அவர்களுக்கு எதிராக வாக்களித்தனர்” எனக் கூறினார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்துப் பேசுகையில், “உத்தரப்பிரதேச தேர்தலில் எங்களால் முடிந்தவரை நாங்கள் போராடினோம். காத்திருந்து தேர்தல் முடிவுகளைப் பார்ப்போம்” என்றார். உத்தரப்பிரதேசத்தில், வரும் மார்ச் 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.