என் கண்ணியம் குலைக்கப்பட்டது : மனம் திறந்த பாவனா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தவர் மலையாள நடிகை பாவனா. தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேட்டி ஒன்றில் இப்போது கூறி உள்ளார். அதில், ‛‛அந்த ஒரே நாள் என் வாழ்க்கை ஒட்டு மொத்தமாக மாறியது. எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும் என பலமுறை கேட்டிருக்கிறேன். என்னுடைய மோசமான மிக நீண்ட கனவு இது. அந்த ஒரு நாளில் மீண்டும் சென்று எனக்கு நிகழ்ந்த மோசமான நிகழ்வை தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா என்று கூட யோசித்திருக்கிறேன். இந்த 5 ஆண்டுகள் என் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் மிகவும் கடினமானது.

நான் பாதிக்கப்பட்டவள் அல்ல, வாழ்க்கையில் மீண்டு வந்தவள். இதற்கு முடிவு கிடைக்கும்வரை நான் போராடுவேன். நீதிக்கான போராட்டம் அவ்வளவு எளிதானது அல்ல. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி விரிவாகக் கூறவில்லை. 15 முறை நீதிமன்றத்துக்கு சென்று என்பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறினேன்.

சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக பேசி என்னை வேதனைப்படுத்தினார்கள். நான் பொய் சொல்வதாகவும் கூறினார். சிலர் என்மீது குற்றம் சொன்னார்கள். மோசமாக வளர்க்கப்பட்டவள் என்று பலரும் சொன்னார்கள். எனக்கு நடந்த கொடுமைக்கு நீதி கேட்டு நான் நீதிமன்றத்திற்கு சென்றதால் மலையாள சினிமா என்னை ஓரங்கட்டியது. இருப்பினும் சிலர் எனக்கு ஆதரவு தந்தார்கள்.

இந்த சம்பவத்தின் மூலம் என்னுடைய கண்ணியம் சுக்குநூறானது. தன்னம்பிக்கையால் தான் நான் தைரியமாக இருந்து வருகிறேன். ஆனாலும் தொடர்ந்து நான் போராடுவேன். என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆறுதலாக இருந்தாலும் தனிமையில் இருப்பது போலவே உணர்ந்தேன்.

எனது மரியாதை எனக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் இன்னும் நான் பயந்துகொண்டுதான் இருக்கிறேன். அதற்கான பதில் என்னிடம் இல்லை. இன்னும் இந்த சமூகம் பெண்களை வேறுகோணத்தில் பார்க்கிறது. அந்த நிலை மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.