நடப்பு அரசியலை கலாய்த்த ‘எல்.கே.ஜி’, மூடநம்பிக்கையை தகர்த்த ‘மூக்குத்தி அம்மன்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்தியில் ஆயுஷ்மான் குரானா, நீனாகுப்தா நடித்த ‘பதாய் ஹோ’ படத்தின் ரீமேக்கான ‘வீட்டுல விசேஷங்க’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ‘சூரரைப் போற்று’ ஹீரோயின் அபர்ணா பாலமுரளி இதில் நடித்துள்ளார். இதனையடுத்து, டார்க் காமெடி ஒன்றின் ஹீரோவாகிறார் பாலாஜி. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், இம்மாதம் வெளியாகிறது.
இதனையடுத்து ஆர்.ஜே.பாலாஜி நடிகர் கார்த்தியின் நண்பரும், ‘தேவ்’, ‘சர்தார்’ படங்களின் தயாரிப்பாளருமான எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் நடிக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின். தவிர, படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டு என்கிறார்கள். வரும் 23ம் தேதி படப்பிடிப்பு கிளம்புவதால், அந்த ஹீரோயின் மற்றும் இதர நடிகர்களின் தேர்வுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. படத்திற்கு நான்கு டைட்டில்களைப் பரிசீலித்து வருகின்றனராம். அதனால் டைட்டில் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
மலையாளத்தில் ப்ருத்விராஜ், இந்திரஜித் சுகுமார் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ‘தியான்’ (Tiyaan) படத்தை இயக்கிய ஜியன் கிருஷ்ணகுமார், இந்தப் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கான வசனங்களை பாபு தமிழ் எழுதுகிறார். ஆர்யாவின் ‘டெடி’, ‘கேப்டன்’ படங்களின் ஒளிப்பதிவாளரான எஸ்.யுவா, இப்படத்தின் கேமராவையும் கவனிக்கிறார். சென்னையில் தொடங்கும் படப்பிடிப்பு, குறுகிய காலத்தில் ஒரேகட்ட படப்பிடிப்பாக நடந்து முடிவடைய உள்ளது. இப்படத்தை தியேட்டருக்கே கொண்டு வராமல், நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.