மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும்,
ஐபேக்
நிறுவனர் பிரஷாந்த் கிஷோருக்கும் ஊடல் என்று சொல்லப்பட்ட நிலையில், இன்று இருவரும்
திரினமூல் காங்கிரஸ்
கட்சியின் விழா ஒன்றில் ஓரே மேடையில் அமர்ந்திருந்த காட்சி அத்தனை வதந்திகளையும் தவிடு பொடியாக்கி விட்டது.
இந்தியாவின் முன்னணி தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் கடந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசகராக இருந்தார். அதேபோல தமிழகத்தில் திமுகவுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். இருமாநிலங்களிலும் திரினமூலும், திமுகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன.
மமதா பானர்ஜி
மேற்கு வங்கத்தை தக்க வைத்துக் கொண்டார். பாஜகவை விரட்டியடித்தார். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த ஆட்சியை திமுக திரும்ப கைப்பற்றியது. அதிமுகவை ஆட்சியை விட்டு விரட்டியடித்தது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் பிகேவை கை கழுவியது திமுக. ஆனால் மமதா பானர்ஜி அப்படி செய்யவில்லை. தொடர்ந்து பிகேவின் ஐபேக் நிறுவனத்துடன் தனது உறவைத் தொடர்கிறார்.
இந்த நிலையில் மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக மமதாவுக்கும், பிகே நிறுவனத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. தங்களை பிகே புறக்கணித்ததாக மூத்த தலைவர்கள் பலரும் போர்க்கொடி உயர்த்தினர். இதுதொடர்பாக மமதாவின் உறவினரும், அவரது ஆலோசகருமான அபிஷேக் பானர்ஜிக்கும், மமதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேபோல பிகே மீதும் அதிருப்தி அடைந்தார் மமதா.
இருப்பினும் பின்னர் இந்தப் பிரச்சினையை மமதாவும், அபிஷேக்கும் பேசி தீர்த்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அபிஷேக்குக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுத்து அவருடன் தான் சமாதானமாகி விட்டதை உணர்த்தினார் மமதா. அத்துடன் பிரச்சினையும் ஓய்ந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் மமதா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி ஆகியோருடன், பிகேவும் கலந்து கொண்டார். இதன் மூலம் பிகேவுடன் எந்தப் பிணக்கும் இல்லை என்பதை மறைமுகமாக மமதா உணர்த்தியுள்ளார்.