சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்படும் வீடுகள் குடும்பத்தலைவிகள் பெயரிலேயே வழங்கப்படும் என்று உலக மகளிர் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில், திமுக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட உலக மகளிர் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், “நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். பேச்சைக் குறைத்து செயலில் நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும். அது கட்சிப் பணியாக இருந்தாலும், ஆட்சிப் பணியாக இருந்தாலும் அந்தப் பணியை நான் அப்படித்தான் நிறைவேற்றுவேன் என்ற அந்த உணர்வோடுதான் என்னுடைய கடமையை நான் ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.
நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மேயர் என்பது 21 தான். 21 மாநகராட்சிகள் இருக்கிறது. கூட்டணிக்கு ஒரு இடத்தை விட்டுக் கொடுத்து விட்டோம். மீதமிருக்கும் 20 இடங்களில் திமுக மேயர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்கள். 20 பேரில் 11 பெண்கள் மேயர்களாக இன்றைக்கு அமர்ந்திருக்கிறார்கள். துணை மேயர் பொறுப்புகளுக்கு எல்லாம் இட ஒதுக்கீடு கிடையாது. இட ஒதுக்கீடு இல்லை என்று சொன்னாலும் 6 பேர் துணைமேயர் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.
நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளில் மொத்தமாக 649 இருக்கிறது. அதில் 350 இடங்களில் மகளிர் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே இது பெரிய சிறப்பு. இதுதான் ‘திராவிட மாடல்’. 50 விழுக்காடு இடங்கள் மகளிருக்காக ஒதுக்கப்பட்டு இருந்தாலும் அதை விடவும் அதிகமான இடங்களில் பெண்கள் வெற்றி பெற்று வந்து இருக்கிறார்கள். இது தந்தை பெரியார் கண்ட கனவு – அறிஞர் அண்ணா நினைத்த உணர்வு – கலைஞர் நமக்கு சுட்டிக் காட்டியிருக்கும் அந்த நிலையைத்தான் நாம் சாதித்து காட்டியிருக்கிறோம். மார்ச் 8 என்பது மகளிருக்கு மட்டுமல்ல, மனிதகுலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள்.
ஆட்சிக்கு வந்ததும் எனது முதல் கையெழுத்து மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பதுதான். இதனைச் சலுகையாக நான் சொல்லவில்லை. மகளிரின் உரிமை என்றுதான் சொல்கிறேன். அதுவரை 40 விழுக்காடாக இருந்த பெண் பயணிகள், இப்போது 61 விழுக்காடாக ஆகிவிட்டார்கள். இதன் மூலமாக, பெண்களுக்கான அன்றாடச் செலவு ஏராளமாக குறைந்துவிட்டது.
கலைஞர் தனது ஆட்சியில் ‘தந்தை பெரியார் நினைவு – சமத்துவபுரம்’ என்ற ஒரு அருமையான திட்டத்தை உருவாக்கி எல்லா மாவட்டங்களிலும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட நேரத்தில் பெண்கள் பெயரில்தான் அந்த வீடுகள் வழங்கப்பட்டது. அதை மனதில் வைத்துக்கொண்டு இப்போது நான் ஒரு அறிவிப்பை வெளியிடப்போகிறேன். இன்று நான் உங்களுக்காக அறிவிக்க இருப்பது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை நாம் ஆட்சிக்கு வந்தவுடன் ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’என்று மாற்றி விட்டோம்.
இனி அதில் வழங்கப்படும் வீடுகள் அனைத்தும் குடும்பத் தலைவிகளின் பெயர்களில்தான் வழங்கப்படும் என்பதை இந்த கூட்டத்தில் நான் அறிவித்து, பெண்களைச் சொற்களில் போற்றாமல் – வாழ்க்கையிலும் போற்றுவோம். பெண்ணுரிமை என்பதைத் தாண்டி, பெண்களுக்கான அதிகாரப் பங்களிப்பை உறுதி செய்வோம். இந்த நாளில், உள்ளாட்சிப் பொறுப்புகளில் இடம்பெற்றுள்ள சகோதரிகள் தங்கள் திறனை முழுமையாக வெளிப்படுத்தி, நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.