கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. 11 லட்சத்து 18 ஆயிரம் மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.
நேற்று தேர்வு தொடங்கிய போது மால்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியைகள் வித்தியாசமான காட்சியை காண முடிந்தது. குழந்தை பெற்ற கையோடு ஒரு மாணவி அவசர அவசரமாக தேர்வு எழுத வந்திருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டனர்.
அந்த மாணவியின் பெயர் அஞ்சராகதுன்னா. மால்டாவில் உள்ள நனரை என்ற கிராமத்தை சேர்ந்தவர். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகளில் வகுப்புகள் நடக்காததால் இவர் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்தார்.
இந்த நிலையில் அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அதே பகுதியை சேர்ந்த முகமது சலீம் என்ற வாலிபருக்கும், அந்த மாணவிக்கும் திருமணம் நடைபெற்றது.
கர்ப்பிணியாக இருந்த அந்த மாணவி, வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டே வீட்டில் இருந்த படி 10-ம் வகுப்பு பாடங்களை படித்து வந்தார். நேற்று அவர் தேர்வு எழுதுவதற்காக தயாராகிக் கொண்டு இருந்தார்.
அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
சுமார் 2 மணி நேரம் மயக்க நிலையில் இருந்த அந்த மாணவி, மயக்கம் தெளிந்ததும் 10-ம் வகுப்பு தேர்வு எழுத செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவரை சக்கர நாற்காலியில் வைத்து பள்ளிக்கு அழைத்து வந்தனர். அவரை பள்ளி ஆசிரியைகள் வரவேற்று உற்சாகமூட்டி அனைத்து உதவிகளையும் செய்தனர்.