தமிழகம்,
கேரளா
உள்ளிட்ட சில மாநிலங்களில் தேசிய ஊரக சுகாதாரம் திட்டத்தின் கீழ் 108
ஆம்புலன்ஸ்
சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவசர கால மருத்துவ தேவைகளுக்கு, இந்தச் சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலத்தில் கனிவ் 108 (கேரள ஆம்புலன்ஸ் நெட்வொர்க் –
Kerala
Ambulance Network for Injured Victims) என்ற பெயரில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக
தீபாமோல்
இன்று பணியேற்றுக் கொண்டார். சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அவர் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த தீபாமோல் இன்று தனது பணியை ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆம்புலன்ஸ் சாவியை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வழங்கி கவுரவித்தார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “பெண்கள் அனைத்து துறைகளிலும் ஈடுபட வேண்டும் என்பதை மையமாக கொண்டு, ஆர்வமுடைய பெண்களை நியமிக்க அரசு முயற்சி எடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மீது காலங்காலமாக இருந்து வரும் கருத்துக்களை உடைக்க முடியும். மேலும் பெண்கள் தாங்கள் விரும்பும் துறைகளில் ஈடுபட உதவும் நோக்கில் இந்த முயற்சி அமைந்துள்ளது.
தீபாமோல் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதுபோன்று அடுத்தடுத்து பல மாவட்டங்களிலும் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவார்கள்.” என்றார்.
கேரளாவின் முதல் பெண் அரசு ஆம்புலன்ஸ் ஒட்டுநராக பொறுப்பேற்றது குறித்து தீபாமோல் கூறுகையில், “என்னுடைய கனவு நினைவேறியது. எனது கனவை நிறைவேற்ற உதவியவர்களுக்கு நன்றி. பெண்கள் சமையலறையில் மட்டும் இருக்க வேண்டியதில்லை. மாறாக, அவர்கள் எந்த வேலையையும் தொடர முன்வர வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த தீபாமோல் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் ஆவார். கடந்த 2008ஆம் ஆண்டில் ஓட்டுநர் உரிமம் பெற்ற அவர், 2009ஆம் ஆண்டில் கனரக வாகனங்களை ஓட்ட உரிமம் பெற்றார். தனது இருசக்கர வாகனத்தில் கோட்டயத்திலிருந்து லடாக் வரை 16 நாட்களில் சென்று சாதனை படைத்துள்ளார். திருச்சூரில் நடைபெற்ற ஆஃப்-ரோட் டிரைவிங் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், பல்வேறு வாகனங்களை ஓட்டிய அனுபவமும் அவருக்கு உள்ளது.
முன்னதாக, 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கயல்விழி என்ற இளம்பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுராகி சாதனை படைத்தார். அதன்பின்னர், அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையின் முதல் பெண் ஓட்டுநராக வீரலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.