டெல்லி: கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சர்வதேச விமான சேவைக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மார்ச் 27-ம் தேதி முதல் வர்த்தக ரீதியிலான பயணிகள் விமனான போக்குவரத்து தொடங்கப்படும் என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதும் விமான போக்குவரத்து நடைபெறு வருகிறது, இருப்பினும் ஒன்றிய உள்த்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்து மட்டுமே நடைபெற்று வருகிறது. வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஜனவரி மாதத்தில் ஓமிக்ரான் தொற்று உச்சத்தில் இருந்த போது, இந்த தடைகளை ஒன்றிய அரசு மேலும் நீட்டித்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. நாள்தோறும் தொற்று பதித்தோர் எண்ணிக்கையானது 6 ஆயிரம் என்னும் அளவிற்கு குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வழக்கமான சர்வதேச விமான பயணிகள் சேவை துவங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்க கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்றி இந்த சேவை துவங்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.