பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகா வில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி பஜ்ரங் தளம் அமைப்பின் நிர்வாகி ஹர்ஷா (26) மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் போலீஸார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இக்கொலையில் எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகிய அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா குற்றம்சாட்டினார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, “அந்த அமைப்புகளுக்கு தொடர்பு இருந்தால், தடை விதிக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில் ஹர்ஷாவின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது. அதற்கான காசோலையை முன்னாள் முதல்வர் எடியூரப்பா நேற்று ஷிமோகாவில் உள்ள ஹர்ஷாவின் குடும்பத்தினரை சந்தித்து வழங்கினார். அப்போது குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தார்.
இதற்கிடையே ஹர்ஷாவின் குடும்பத்தினர் நலனுக்காக பஜ்ரங் தளம் தொடங்கிய வங்கி கணக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நன்கொடை வழங்கியுள்ளனர்.
திங்கள்கிழமை மாலை வரை ரூ.66 லட்சம் நன்கொடை வந் துள்ளதாக ஹர்ஷாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.