மதுரை: சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று பிற்பகலில் அறிவிக்கப்படவுள்ளது.
கோகுல்ராஜ் கொலை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையத்தில் ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். வேறொரு சாதி பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் (35), அருண் (22), குமார் என்ற சிவகுமார் (36), சங்கர் (24), அருள்செந்தில் (35), செல்வகுமார் (43), தங்கதுரை (31), சதீஷ்குமார் (26), ரகு என்ற ஸ்ரீதர் (21), ரஞ்சித் (22), செல்வராஜ் (32), சந்திரசேகரன் (44), பிரபு (34), கிரிதர் (23), சுரேஷ் (37), அமுதரசு (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் அமுதரசு தலைமறைவானார்.
சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்: இந்த வழக்கு முதலில் நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் கோகுல்ராஜ் தாயார் சித்ரா உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோகுல்ராஜ் கொலை வழக்கை மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.
10 பேர் குற்றவாளிகள்: மதுரையில் வழக்கு விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மார்ச் 5-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதீஷ்குமார், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரதர் ஆகியோர் 10 பேர் குற்றவாளிகள் என்றும், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி சம்பத்குமார் அறிவித்தார். யுவராஜ் உட்பட 10 பேருக்கான தண்டனை விபரம் மார்ச் 8-ல் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
பிற்பகலில் தண்டனை அறிவிப்பு: இந்நிலையில் வழக்கின் தண்டனை விவரங்களை மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று காலை 11 மணிக்கு அறிவிப்பதாக இருந்தது. அப்போது யுவராஜ் உட்பட 10 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தண்டனை தொடர்பான இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தண்டனை விவரங்களை இன்று பிற்பகலுக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.