சென்னை: சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: நம் நாட்டில் ஆன்மிகம், அறிவுசார், சமூகம், அரசியல் களங்களில் ஆதிகாலம் முதலே பெண்களின் தலைமைத்துவம் இருந்துள்ளது நாம் அனைவரும் பெருமைப்படும் விஷயமாகும்.
அவ்வையார், வீர மங்கை வேலு நாச்சியார், ஜான்சி ராணி, டாக்டர் அன்னி பெசன்ட் மற்றும் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய அனைத்து பெண் தலைவர்களுக்கு தேசம் எப்போதும் நன்றியுடன் இருக்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், தொழில்முனைவு, ஆராய்ச்சி, மேம்பாடு,நிர்வாகம் மற்றும் அரசியல் என அனைத்து தளங்களிலும் நமது பெண் தலைவர்களைப் பற்றி பெருமை கொள்ளவேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் தனது இலக்கை நிறைவேற்ற தேசம் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பெண்களின் மேதைமை முழுமையாக மலருவதற்கு பாதுகாப்பான மற்றும் ஏதுவான சூழலை உறுதி செய்வது நமது தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்பாகும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பெண் ஏன் அடிமையானாள் என்று கேள்வியெழுப்பி, அறிவொளிப் பாய்ச்சிய பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வழியில் நடைபோடும் திராவிட மாடல் அரசு, மகளிர்களுக்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்புகளில் 40 சதவீதமாக இடஒதுக்கீடு உயர்வு, தொடக்கப் பள்ளிகளில் முழுவதும் பெண் ஆசிரியர்கள் நியமனம், உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, பேறுகால விடுப்பு ஒரு ஆண்டாக உயர்வு,மகளிர் சுயஉதவிக் குழு, திருமண நிதி உதவி,கல்விக் கட்டணச் சலுகைகள், நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று பெண்களுக்கான சமூக பொருளாதார உரிமைகளை மீட்டளிக்கும் திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். பெண்களின் முன்னேற்றத்துக்குத் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி: அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என எம்ஜிஆர், தனி இடஒதுக்கீடு வழங்கினார். பெண்கள் நலனுக்காக ஜெயலலிதா, தொட்டில் குழந்தைத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண் கல்விக்காக ரொக்கப் பரிசு, தாலிக்குத் தங்கம், மகப்பேறு நிதி உதவி என்று தனது ஆட்சிக் காலத்தில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினார். அவர் மறைவுக்குப் பின்னர், பெண்களுக்கான மகப்பேறு திட்டத்தின் உதவித் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்வு, மானிய விலையில் ஸ்கூட்டர், மகப்பேறு விடுமுறைக் காலம் அதிகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பெண்கள் சீரும், சிறப்புமாக வாழ, அதிமுக எப்போதும் உழைக்கும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்திய மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் இயக்கம் எப்போதுமே முன்னோடியாக உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்குச் சம உரிமை, சமவாய்ப்பு வழங்கும் முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உலகுக்குபெரும் அச்சுறுத்தலாக உள்ள காலநிலைமாற்றத்தின் தீயவிளைவுகளை கட்டுப்படுத்தும் இயக்கங்களைப் பெண்களும், சிறுமிகளும் தலைமையேற்று நடத்துகின்றனர். உலகை ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழ்பவர்கள் பெண்கள் என்பதுஇதன்மூலம் தெளிவாகிறது. பெண்களுக்குக் கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையையும், பொதுவெளியில் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடுவதற்குமான உரிமையை வென்றெடுக்க இந்த நாளில் நாம் உறுதியேற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பாராட்டுக்குரியது. வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றவேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பெண்களுக்கு எதிரான இன்றுள்ள அவலநிலையை ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலமாகவே மாற்ற முடியும். குடும்பம், சமூகம், ஊடகம், கல்வித்திட்டம், அரசு நடவடிக்கைகள், அமைப்புகள்என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான சட்ட முயற்சிகளையும், போராட்டங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்து முன்னெடுக்கும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: பிரதமர் மோடி ஆட்சியில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33சதவீத இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சர்வதேச பெண்கள் தினத்தைமுன்னிட்டு இந்த ஆண்டு “நீடித்த தொடர்வளர்ச்சிக்காகப் பாலின சமத்துவம் காண்போம்” என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவிதினகரன்: தமிழக பெண்களின் உயர்வுக்காகஉள்ளாட்சி அமைப்புகளில் சரிபாதி இடங்களைப் பெண்களுக்காக ஜெயலலிதா ஒதுக்கினார். அதன்படி, இன்று ஆயிரக்கணக்கில் பெண் பிரதிநிதிகள் பதவிகளை அலங்கரித்துவருகின்றனர். ஜெயலலிதா வழியில் பெண்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபடுவதில் அமமுக உறுதியோடு இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: தேவதையென்றோம், தெய்வம்என்றோம். யதார்த்தம் உணர்ந்து, ஆண்களைப் போலவே பெண்களும் சம ஜீவியென்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். அதன் அடையாளமான பெண்கள் தினத்தில் சக பயணிகளை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாமக இளைஞர் அணி தலைவர்அன்புமணி, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, மமக தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.