சேலம் : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, உரிமை பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பை வலியுறுத்தி சேலத்தைச் சேர்ந்த 9 ம் வகுப்பு மாணவி இரண்டு கண்களைக் கட்டிக் கொண்டு தொடர்ந்து 3 மணி நேரம் எழுதி சாதனை படைத்துள்ளார்.
சேலம், கோர்ட் ரோடு கே.எஸ். நகரைச் சேர்ந்தவர் அருள்முருகன். இவரது மகள் எஃபியா. மணக்காடு, காமராஜர் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், இன்று (மார்ச் 8) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண் கல்வி, உரிமை மற்றும் பெண்களுக்கான சட்டப்பாதுகாப்பை வலியுறுத்தி தொடர்ந்து மூன்று மணிநேரம் தனது இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு புத்தகங்களில் உள்ளவற்றை எழுதி சாதனை படைத்துள்ளார்.
பள்ளித்தலைமையாசிரியர் வசந்தி அளித்த ஊக்கத்தினைத் தொடர்ந்து மாணவி எஃபியா இந்த சாதனையை செய்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நிர்மலா தேவி ஆகியோர் மேற்பார்வையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநகர மேயர் ராமச்சந்திரன், மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி மாணவி எஃபியாவின் சாதனையை பாராட்டினர்.
மகளிர் தினத்தின் மேன்மையை எடுத்துக்காட்டும் வகையில் மூன்று மணிநேரம் கண்களைக் கட்டிக்கொண்டு எழுதிய பள்ளிமாணவயை பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.