டமாஸ்கஸ்,
சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் குற்ற்ஞ்சாட்டி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள ஹரஸ்டா நகர் மீது இஸ்ரேல் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சிரியாவில் அமைக்கப்பட்டுள்ள ஏவுகணை தடுப்பு அமைப்பு நடு வானில் தடுத்து அழித்தது. ஆனால், சில ஏவுகணைகள் ஹரஸ்டா நகரை தாக்கியது.
இந்த ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்ததாக சிரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை குறிவைத்தே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.