தமிழக காவல்துறையில் பெண்களின் பங்கு மகத்தானது என்று டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கத்தினர் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்த நடமாடும் மருத்துவ முகாமை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது:
தமிழக காவல்துறையில் ஒரு டிஜிபி, 16 ஐஜிக்கள், 10 டிஐஜிக்கள், 27 எஸ்பிக்கள், 3 ஏஎஸ்பிக்கள், 19 ஏடிஎஸ்பிக்கள், 37 டிஎஸ்பிக்கள், 20 ஆயிரம் காவலர்கள் என மொத்தம் 23,533 பெண்கள் தமிழக காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். தமிழக காவல்துறையில் இவர்களின் பங்களிப்பு மகத்தானது. தற்போது எல்லா துறையிலும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
சென்னையில் கடந்த மழை வெள்ளத்தின் போது, காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உயிருக்கு போராடிய ஒருவரை தோளில் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. கமாண்டோ பணியில் கூட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
பெண் காவல்துறையினர் நன்றாக இருந்தால் தான் காவல்துறை நலமாக இருக்கும் என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM