திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒதுக்கப்பட்ட 16 பதவிகளில் திமுகவினரே போட்டியிட்டு கைப்பற்றியது போக மீதி 8 பதவிகள் மட்டுமே விசிகவுக்கு கிடைத்துள்ளது. இருப்பினும், விசிக பொறுமை காக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலித் அரசியல் கட்சியாக அறியப்படும் திருமாவளவன் தலைமையிலான விசிக கடந்த 2019 ஆண்டு மக்களவைத் தேர்தல் முதலே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு அளிக்கப்பட்ட 2 மக்களவைத்தொகுதிகளில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மற்றொரு சீட்டில், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விசிகவுக்கு அளிக்கப்பட்ட 6 இடங்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து, விசிக, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை விசிக தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடித்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி ஸ்வீப் செய்து வெற்றி பெற்றிருந்தது. திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவியும், ஜெயங்கொண்டம், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவிகள், திண்டிவனம், பெரியகுளம், ராணிப்பேட்டை நகராட்சி துணைத் தலைவர் பதவிகளும் பெண்ணாடம், காடையாம்பட்டி, பொ.மல்லாபுரம் ஆகிய பேருராட்சிகளின் தலைவர் பதவிகளும், கடத்தூர், திருப்போரூர், புவனகிரி, கொளத்தூர், வேப்பத்தூர், அனுமந்தன்பட்டி, ஓவேலி ஆகிய பேரூராட்சிகளின் துணைத் தலைவர் பதவிகள் என 16 பதவிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், மறைமுகத் தேர்தலில், திமுக தலைமை விசிகவுக்கு ஒதுக்கிய இடங்களில் சில இடங்களில் திமுக உறுப்பினர்களே போட்டியிட்டு கைப்பற்றினர். இதனால், திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 8 இடங்களில் மட்டுமே கிடைத்தது. நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயந்தி ராதாகிருஷ்ணன் கைப்பற்றினார். இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், ட் திமுக தலைமையின் உத்தரவை மீறி திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்ற செய்தியால் கோபமடைந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சிகளின் இடங்களில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை கடும் எடுக்கப்படும். இத்தகைய செயலால் தான் கூனிக் குறுகி நிற்பதாகக் கூறினார். மேலும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு தனது வருத்தத்தை தெரிவிப்பதாகக் கூறினார். ஆனால், சில இடங்களில் பதவி விலக மறுத்து வருகின்றனர்.
முதலமைச்சரின் அறிக்கையைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன், முதலமைச்சரின் குறுகி நிற்கிறேன் என்ற வார்த்தையால் நாங்கள் உருகி நிற்கிறோம். விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலகவில்லை என்றாலும் பரவாயில்லை விசிக அமைதி காத்து கூட்டணி தர்மத்தைக் காப்போம் என்று கூறினார்.
நகர்ப்புற உள்ளட்சி அமைப்பு தலைமை பதவிகளில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 8 இடங்களை மட்டுமே விசிகவுக்கு கிடைத்துள்ளது. இருப்பினும், திமுக கூட்டணியில் விசிக பொறுமை காக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ.வுமான சிந்தனைச் செல்வன் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
“தோழமைக் கட்சிகளுக்கு மதிப்பளித்து அவர்களுகு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்கள் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் கூறியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம். இதை நாங்கள் சுமுகமாகத் தீர்க்க விரும்புகிறோம்” என்று சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”