உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 13-வது நாளாகத் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் உக்ரைனின் கார்கிவ் நகரில் உக்ரைன் ராணுவத்துக்கும், ரஷ்ய ராணுவத்துக்கும் இடையே நடந்த தாக்குதலில், ரஷ்ய ராணுவப் படையின் ஜெனரல் மேஜர் விட்டலி ஜெராசிமோவ் உக்ரைன் படையினரால் கொல்லப்பட்டார் என உக்ரைன் ராணுவ புலனாய்வு அமைப்பு அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டிருக்கிறது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் நேற்று வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய ஜெலன்ஸ்கி, “ரஷ்யாவின் படைகள் வடக்கு மற்றும் மேற்கு பகுதியிலிருந்து தலைநகர் கீவை நோக்கி நெருங்கி வருகின்றன. நான் கீவில் பாங்கோவா தெருவில்தான் இருக்கிறேன். எங்கும் ஒளிந்துகொள்ளவில்லை. யாருக்கும் நான் பயப்படமாட்டேன். தேசத்திற்கான இந்தப் போரில் வெற்றிக்காக நான் என்னால் முடிந்ததை செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் அந்த வீடியோவில், “ரஷ்யா போரை நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறிய இடங்களில் உக்ரைனிலிருந்து தப்பிச்செல்ல முயலும் பொதுமக்களை ரஷ்ய ராணுவத்தினர் தாக்கினார்கள்” என ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது குற்றம் சாட்டியிருந்தார்.