தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பங்களாத் தெருவைச் சேர்ந்தவர் கௌதம். இவர், கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் அரிசிக் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு டிப்டாப் உடை அணிந்து வந்த ஒருவர், “நான் எஸ்.பி.சி.ஐ.டி போலீஸ்” என அறிமுகப்படுத்திக் கொண்டு, “என்னோட கார் ரிப்பேர் ஆகி நிற்குது. அதை சரி செய்ய மூவாயிரம் பணம் தேவைப்படுது. என்னோட பர்ஸை வீட்ல மறந்து வச்சுட்டு வந்துட்டேன். வீட்டுக்குப் போனதும். `கூகுள் பே’ மூலம் பணத்தை திருப்பித் தர்றேன்” எனச் சொல்லியிருக்கிறார்.
அதை நம்பிய கௌதம், ரூ.3 ஆயிரம் ரொக்கப் பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு `கூகுள்பே’ போன் நம்பரையும் பேப்பரில் எழுதிக் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்டு கடையை விட்டு வெளியே சென்ற அந்த டிப்டாப் நபர், கூகுள் பே நம்பரை எழுதி கொடுத்த பேப்பரை கிழத்துப் போட்டுள்ளார். இதைப் பார்த்த கௌதம் அவர் மீது சந்தேகப்பட்டு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதையடுத்து இருவருக்குமிடைய ஏற்பட்ட தகராறில் கௌதமிற்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி, “தூக்கி உள்ள வச்சு அடிச்சு துவைச்சுடுவேன்” என அந்த நபர் மிரட்டியிருக்கிறார்.
அதைக் கண்டு அருகிலிருந்த கடைக்காரர்கள் உதவியுடன் அந்த டிப்டாப் ஆசாமியைப் பிடித்து வைத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் சொல்லியுள்ளார் கௌதம். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அந்த நபரை அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பது தெரியவந்தது. மேலும், அவர் வைத்திருந்த ஒரு அடையாள அட்டையில் கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளர் எனக் குறிப்பிட்டிருந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
“என்னோட அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனாலதான் இப்படி செஞ்சுட்டேன்” எனச் சொல்லி மழுப்பியுள்ளார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒவ்வொரு கடையாகச் சென்று, “நான் போலீஸ்” எனச் சொல்லி கடைக்குத் தகுந்தாற்போல ரூ.300 முதல் ரூ.3,000 வரை வசூல் செய்ததும் தெரியவந்துள்ளது. எந்த பதற்றமும் இல்லாமல் மிக நேர்த்தியாக கடைகளில் சென்று பணம் வசூல் செய்துவிடுவாராம். அரிசிக் கடைக்காரர் கூகுள் பே நம்பர் எழுதிக் கொடுத்த பேப்பரை, கடைக்கு முன்பாகவே கிழித்துப் போட்டதால் மாட்டிக் கொண்டார். தொடர்ந்து தட்சிணாமூர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.