ஜெய்ப்பூர்: நாளை மறுநாள் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று ஜெய்ப்பூர் வந்த பிரியங்கா காந்தி கூறினார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், நாளை மறுநாள் (மார்ச் 10) வெளியாக உள்ளன. நேற்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், உத்தரபிரதேசம், மணிப்பூரில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் என்றும், அங்கு ஆம்ஆத்மி ஆட்சியமைக்கும் என்றும் கூறப்பட்டது. அதேநேரம் கோவா, உத்தரகாண்டில் பாஜக – காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றிய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லாவும் வந்தார். அப்போது ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, ‘மக்கள் புத்திசாலித்தனத்துடன் வாக்களித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். சரியான முடிவை மக்கள் எடுப்பார்கள். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தான் எதையும் கூற முடியும். அதுவரை காத்திருக்க வேண்டும்’ என்றார்.