`தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமம் நடத்தும் கல்வி சிந்தனை அரங்கு – 2022, சென்னையில் உள்ள ஐ.டி.சி ஹோட்டலில் மார்ச் 8, 9 ஆகிய இரு தேதிகள் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, `இந்தியாவுக்கு நீட் தேவை இல்லை’ என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர், “நீட் தேர்வு வந்த பிறகு பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டங்களை நடத்துவதைக் குறைத்துவிட்டனர். மாநில பாடத்திட்டத்தில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றதால் உயிரிழந்ததாகக் கர்நாடக முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாடத்திட்டத்தைத் தாண்டி நீட் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்து மாணவர்கள் படித்து வருகின்றனர். நீட் தேர்வின் பெரும்பாலான கேள்வித்தாள்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்படுகின்றன.
அதனால், தமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாநில பாடத்திட்டத்தைத் தாண்டி ஹிந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்கப்படுகின்றன.
மாநில உரிமையைப் பாதுகாக்க நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்றைய முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு பெற்றுத் தந்தார். தற்போது பெரும்பாலான மாநிலங்கள் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் அதிகமானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள்தான். அவர்களின் தரம் குறைவாக இருக்கிறதா?
ஒரு மாணவர் பன்னிரண்டு வருடங்கள் படித்த பாடத்திட்டத்தை 3 மணிநேர நீட் தேர்வில் எப்படி முடிவெடுப்பது? நீட்தேர்வு இல்லாத 2016-2017 கல்வியாண்டில் மாநில பாடத்தில் படித்த 3,400 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தேர்வானார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்களில் 35 பேர் மட்டுமே தேர்வானார்கள்.
அதாவது, தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் 12.14 சதவிகிதம் பேர் மருத்துவப் படிப்புக்குத் தேர்வானார்கள். ஆனால், நீட்தேர்வு வந்தபிறகு 1.7 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். எனவே, நீட் தேர்வால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச பாடத்திட்டத்தை வழங்குகிறோம் எனக் கூறி மாநிலத்தின் கல்வி உரிமையைப் பறிக்கின்றனர். நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் நீட்டுக்கு எதிராகத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர்” என்றார்.