உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஒருவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பைனாகுலர் மூலம் கண்காணித்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று நேற்று முடிவடைந்தது. இதன் தொடர்ச்சியாக வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும்பாலானவற்றில், பாஜகவே மீண்டும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது இடத்தில் சமாஜ்வாதி கட்சி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், கடைசி இரண்டு கட்ட தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருந்ததாக சில கள ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இதனால் உத்தரபிரதேசத்தில் பாஜக – சமாஜ்வாதி இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஹஸ்தினாபூர் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யோகேஷ் சர்மா என்பவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பைனாகுலர் மூலம் கண்காணித்து வருவது தெரியவந்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதை உறுதி செய்யவே, இவ்வாறு கண்காணித்து வருவதாக அவர் கூறுகிறார். தனது வீட்டில் மட்டுமல்லாமல், வெளியில் நடமாடும் போதும் பைனாகுலரில் வாக்கு இயந்திரங்கள் இருக்கும் அறையை அவர் கண்காணித்தபடியே இருப்பதாக அத்தொகுதி மக்கள் கூறுகின்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் யோகேஷ் சர்மா தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM