உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கும் முன்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு குறைவாகவே இருந்தது. உக்ரைன்-ரஷியா போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது.
கடந்த 2-ந் தேதி கச்சா எண்ணெய் விலை 110 டாலர்களாக உயர்ந்தது. 3-ந் தேதி அது 118 டாலராக அதிகரித்தது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 139.19 டாலராக அதிகரித்துள்ளது.
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலால் ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என ஊகங்கள் எழுந்துள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்து, மார்ச் 10ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால், எரிபொருள் விலை விரைவில் உயரலாம் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:-
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நமது தேவைகளில் 85 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதியையும், 50-55 சதவிகிதம் எரிவாயுவையும் சார்ந்திருந்தாலும் நமது ஆற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. கச்சா ஆயிலை வாங்க மறுத்தால் ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயு குழாய்களை துண்டிப்போம்- உலக நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை