கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 13-வது நாளை அடைந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் சற்றும் சளைக்காமல் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் தாக்குதலில் 2-வது ரஷ்ய ராணுவ ஜெனரல் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உளவுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்ட உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுப் பிரிவு, ’ரஷ்யாவின் மேஜர் ஜெனரல் விடாலில் கெராஸிமோவ் உக்ரைனின் கார்கிவ் நகரில் வீழ்த்தப்பட்டார். இவர் ரஷ்யாவின் 41-வது படைப்பிரிவின் தலைவராக இருந்தார். அவருடன் இன்னும் சில மூத்த அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்ய வீரர்களின் உரையாடலை இடைமறித்ததாகக் கூறி உக்ரைன் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அந்த உரையாடலில் ரஷ்ய வீரர்கள் தங்களின் தொலைத்தொடர்பு உபகரணங்கள் உக்ரைனுக்குள் பாதுகாப்பாக இல்லை எனப் பேசிக் கொள்கின்றனர்.
இதற்கிடையில், புலனாய்வு பத்திரிகையாளரான பெலிங்காட், கெராஸிமோவின் மரணத்தை உறுதி செய்துள்ளது. கெரிஸ்மோவ் இதற்கு முன்னதாக செச்சன்யா போர், சிரிய போர், க்ரிமியா படையெடுப்பு எனப் பலவற்றிலும் பங்கெடுத்து பதக்கங்களைக் குவித்தவராவார். உக்ரைன் தாக்குதலில் இறந்த முதல் ராணுவ ஜெனரல் ஆண்ட்ரெய் சுகோவெட்ஸ்கியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ’இந்தப் போர் ரஷ்யாவுக்கு ஒரு கெட்ட கனவாக அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. உக்ரைனின் பதிலடியை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்’ எனக் கூறியுள்ளார்.
ரஷ்யாவை எப்படி சமாளிக்கிறது உக்ரைன்? – 5 காரணங்கள்:
பலம் வாய்ந்த ரஷ்யாவை 13 நாட்களாக உக்ரைன் சமாளிப்பது குறித்த போர் நிபுணர்கள் விரிவாகப் பேசியுள்ளனர். அதில், முதல் காரணமாக உக்ரைனின் ஆயத்தநிலை கூறப்படுகிறது. 2014-ல் ரஷ்யா, உக்ரைனின் தீபகற்பமான கிரிமியாவை ஆக்கிரமித்தபோது உக்ரைன் ராணுவம் தனது படைபலத்தையும் திறமையையும் வளர்த்தெடுக்கத் தொடங்கியுள்ளது. 2016-ல், உக்ரைன் சிறப்புப் படைகளுக்கு நேட்டோ படைகள் பயிற்சி வழங்கியது. இந்த சிறப்புப் படையைச் சேர்ந்த 2000 பேர் இப்போதும் களத்தில் உள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளாகவே உக்ரேனியர்கள் திட்டமிடுதல், பயிற்சி செய்தல், தங்களைத் தாங்களே ஆயுதத் தன்னிறைவுடன் வைத்துக் கொள்ளுதலை மேற்கொண்டுள்ளனர் என்று ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக பேராசிரியர் டக்ளஸ் லண்டன் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது, உக்ரைன் பற்றிய புரிதல் இல்லாமை கூறப்படுகிறது. ஒரு காலத்தில் மாஸ்கோ கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைன் படைகள் பற்றி ரஷ்யா குறைத்து மதிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. உக்ரைனின் நிலப்பரப்பு பற்றி ரஷ்யர்களுக்கு போதிய புரிதல் இல்லை. ஆனால், உக்ரைன் ராணுவம் சேதமடைந்து சகதியான சாலைகளிலும் எளிதாக முன்னேறத் தெரிந்துவைத்துள்ளது. உள்ளூர் மக்களும் தேவைப்படும்போதெல்லாம் ஆயுதம் ஏந்துகின்றனர். தெருச் சண்டைகளை ரஷ்ய படைகள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இதை உக்ரைன் ரஷ்யாவுக்கு சவாலாக மாற்றியுள்ளது.
ஒற்றுமைதான் உக்ரைனின் மிகப் பெரிய பலம். இதுவரை ரஷ்யாவை தாக்குப்பிடிக்க 3-வது காரணமாக இது கூறப்படுகிறது. பொதுமக்கள் தாமாகவே முன்வந்து களத்தில் நிற்பது அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வலு சேர்த்துள்ளது.
தவறான திட்டமிடுதல்: ரஷ்யாவின் தவறான திட்டமிடுதல் தான் 13 நாட்களாக உக்ரைன் படைகள் ரஷ்யாவை எதிகொள்ளக் காரணம் எனக் கூறப்படுகிறது. முதல் 2 நாட்களில் உக்ரைனுக்குள் ரஷ்யா அனுப்பிய கிரவுன்ட் ட்ரூப்ஸ் அளவு போதாது எனக் கூறப்படுகிறது. மூன்று நாட்களில் படையெடுப்பை முடித்துவிடலாம் என ரஷ்யா நினைத்தது. ஆனால், அவர்களின் ஊகம் கேலிக்கூத்தானது. இப்போது அதை உணர்ந்து ரத்தக் காயங்கள், உயிரிழப்புகளுடன் ரஷ்யப் படைகள் திரும்புகின்றன என நிபுணர்கள் கூறுகின்றன.
உளவியல் சிக்கல்… – போரை தொடங்குவதற்கு முன்னதாகவே எல்லையில் படைகளைக் குவித்து ரஷ்யா உலகுக்கே அச்சத்தைக் காட்டியது. ஆனால், ரஷ்ய ராணுவ அதிகாரிகள் யாரும் உக்ரைனில் இருக்கும் பலரும் ரஷ்ய மொழி பேசக்கூடிய சகோதர பந்தம் கொண்டவர்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டனர். இது ரஷ்யப் படைகளின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இனியும் ரஷ்யா தனது படையெடுப்பு வேகத்தைக் குறைக்காவிட்டால் உக்ரைனில் உள்ள ரஷ்ய போர்க் கைதிகளின் நிலவரம் என்னவாகும் என்பதைக் கணிக்க முடியாது எனக் கூறப்படுகிறது.