லிவ், : ரஷ்யா ஒரு பக்கம் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டாலும், தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கின்றன. அதே நேரத்தில் ரஷ்யாவின் போர் நிறுத்த அறிவிப்புக்கு உக்ரைன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.
இந்தப் போரால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். ஆனால், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் வெளியேற வாய்ப்பு தரப்படாமல் இருந்தது.இந்நிலையில், மனிதநேய அடிப்படையில், பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. குறிப்பாக ‘தலைநகர் கீவ், தெற்கே உள்ள துறைமுக நகரான மரியுபோல் மற்றும் கிர்கிவ், சுமி நகரங்களைச் சேர்ந்தவர்கள் வெளியேறலாம்’ என ரஷ்யா அறிவித்தது.ஆனால், ‘ரஷ்யா மற்றும் அதற்கு ஆதரவாக இருக்கும் பெலாரஸ் நாட்டுக்கு மக்கள் வெளியேறுவதற்கான இத்திட்டத்தை ஏற்க முடியாது’ என, உக்ரைன் அறிவித்துள்ளது.இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வர, இரு தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் நடக்க உள்ளது. ஆனால், ரஷ்யா தொடர்ந்து ஆக்ரோஷமாக தாக்குதல்களை நடத்தி வருவதால், அதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.ரஷ்யா போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டாலும், அந்நாட்டுப் படைகள் தொடர்ந்து பல நகரங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. உக்ரைன் படைகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் ரஷ்யப் படைகள் பல இடங்களில் திணறி வருகின்றன. இதற்கிடையே, இந்தப் போர் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பங்குச் சந்தைகளும் ஆட்டம் கண்டுள்ளன. சில நாடுகளில் உணவுப் பொருள் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்தப் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்பாக தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. கார்கிவ் நகரில் மட்டும், 133 பொதுமக்கள் உட்பட, 209 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.உக்ரைனில் இருந்து இதுவரை, 17 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. ‘இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகம் சந்திக்கும் மிகப் பெரிய அகதிகள் பிரச்னையாக இது மாறும்’ என, ஐ.நா., அகதிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.அதே நேரத்தில், மின்சாரம், குடிநீர், உணவுப் பொருட்கள் இல்லாமல், லட்சக்கணக்கான மக்கள் வெளியேற முடியாமல் உக்ரைனில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.விசாரணை துவங்கியதுரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை எதிர்த்து
, சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தொடர்ந்த வழக்கின் விசாரணை துவங்கியுள்ளது. இந்த விசாரணையில் ரஷ்யப் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.’போரை உடனடியாக நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டும்’ என, உக்ரைன் தரப்பில் வாதிடப்பட்டது.துருக்கியில் பேச்சுரஷ்யா மற்றும் உக்ரைனுடன் நல்ல நட்பில் உள்ளது துருக்கி. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் அந்த நாடு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கியில் உள்ள அன்டாலியா நகரத்தில் வரும் 10ல் பேச்சு நடத்தவுள்ளதாக, துருக்கி வெளியுறவு அமைச்சர் மேவ்லட் காவ்சோக்லு தெரிவித்துள்ளார்.
Advertisement